லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய்யின் திட்டம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசை யமைக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் அவர் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜுன் உள்பட பலர் நடிக்கின்றனர். காஷ்மீரில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது.இதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த 2 தினங்களாக தக்ஷின் மாநாடு நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், மஞ்சு வாரியர், மணிரத்னம், கார்த்தி, தனுஷ் உள்பட ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். நேற்று லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்தும் கலந்துகொண்டார். அப்போது தான் லியோ ஆடியோ லாஞ்ச் குறித்த அப்டேட்டை அவர் வெளியிட்டார். நடிகர் விஜய் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தென் தமிழகத்தில் நடத்த விரும்புவதாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.அதன்படி திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நிகழ்ச்சியை நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக லலித் குமார் தெரிவித்துள்ளார். சமீப காலமாக நடிகர் விஜய், படிப்படியாக சில அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வரும் இந்த வேளையில், லியோ ஆடியோ லாஞ்சை மாநாடு போல நடத்த பிளான் போட்டு உள்ளதால், ஒருவேளை அந்த நிகழ்வில் தனது அரசியல் எண்ட்ரியை அறிவிக்கப்போகிறாரோ என கேள்வி எழுந்துள்ளது
அரசியல் எண்ட்ரியை அறிவிக்க நடிகர் விஜய் திட்டமா?.
