சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கோயிலிலேயே வைத்திடுக! வைகோ வேண்டுகோள்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோயிலில் கடந்த 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, பூமிக்கு அடியில் இருந்து 23 செப்புத் திருமேனிகள், 412 செப்பேடுகள் மற்றும் பூஜைப் பொருட்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.
தருமபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ள அந்தக் கோயிலில் வரும் மே 24ஆம் தேதி குடமுழுக்கு நடக்க உள்ளது. அதற்கு யாகசாலை அமைப்பதற்காக ஏற்பாடுகள் நடந்தபோது இவை கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இவற்றில் குறிப்பிடத்தக்கது, செப்பேடுகள் தான். சோழர்கள் காலத்தைச் சேர்ந்த அந்தச் செப்பேடுகளில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற அப்பர் சுவாமிகள் ஆகியோரின் தேவாரப் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையில் இருந்து உரிய அதிகாரிகள் வந்து இந்தச் செப்பேடுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
திருஞானசம்பந்தர், தனது பாடல்களில் தன்னைத் ‘தமிழ் ஞான சம்பந்தன்’ என்றே குறிப்பிட்டுக் கொள்கிறார்,  தமிழகத்தில் அவரைப் போல வேறு எவரும் அப்படி மொழியோடு சேர்த்து தன் பெயரைக் குறிப்பிட்டதாக வரலாறு இல்லை. அதேபோல், ‘தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்’ என்று திருநாவுக்கரசரும் தம் முதல் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படித் தமிழுக்காக வாழ்ந்தவர்களின் பாடல்கள் பொறிக்கப்பட்ட செப்பேடுகள் 750 ஆண்டுகள் மண்ணில் புதைந்து கிடந்து நம் காலத்தில் வெளிப்பட்டது, உண்மையில் வரலாற்றுச் சம்பவம் ஆகும்.
இந்த வரலாற்று ஆதாரமான செப்பேடுகள், சீர்காழி சட்டநாதர் கோயிலிலேயே வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு ஓர் சிறப்பு அறை கட்டப்பட்டு அதில் இந்த செப்பேடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட வேண்டும்.இதன் மூலம் மக்களிடையே தமிழ் மொழி பற்றிய பெருமித உணர்வு வளர்ந்து ஓங்கும். சோழர்கள் வரலாறு பற்றிய விழிப்புணர்வு மேலும் பரவும். இந்த மண்ணில் தமிழை எப்படி எல்லாம் மன்னர்கள் வளர்த்துள்ளனர் என்பது தெரிய வரும்.  குடமுழுக்கிற்குப் பின்னர் கோயிலிலேயே அருங்காட்சியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தருமையாதீனத்தின் குருமகா சந்நிதானம் ஏற்கனவே அறிவித்துள்ளார். ‘சைவமும் தமிழும் தழைத்து இனிது ஓங்குக’ என்பதுதான் அந்த ஆதீனத்தின் முழக்கம். தமிழ் வளர்ப்பதில் அந்த ஆதீனம் காட்டி வரும் அக்கறை போற்றுதலுக்குரியது.
சீர்காழி சட்டநாதர் கோயிலில் அருங்காட்சியகம் அமைத்திட,  தளபதி தலைமையிலான நம் தமிழக அரசு ஆதீனத்திற்கு அனுமதி அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *