அறிவியல் கலைச்சொற்களுக்குச் செயலிகள் தேவை!!!
அறிவியல் புனைகதைகளுக்குத் தனி தொலைக்காட்சி தேவை!!!
தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல்தமிழ் மற்றும்
தமிழ்வளர்ச்சித்துறையில் நிறுவப்பட்டுள்ள முனைவர் ஏசுதாசன் நினைவு அறக்கட்டளை,
பாரதரத்னா சி.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளை, திருமதி அன்னபூரணி
இராமநாதன் நினைவு அறக்கட்டளைகளின் பொழிவுகள் ‘அறிவியல்தமிழ் வளர்ச்சி:
இன்றைய தேவைகள்’ என்னும் பொருண்மையில் நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர், அறிவியல்தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித்
துறைத்லைவர் முனைவர் சி.தியாகராஜன் வரவேற்புரையும் துணைவேந்தர்
வி.திருவள்ளுவன் அவர்கள் தலைமையுரையும் ஆற்றினர். சென்னைக் கிறித்துவக்
கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் டேவிட்பிரபாகர்,
“மொழி காலந்தோறும் வளர்ச்சி பெறும். விலங்குகள், பறவைகளின்
வாழ்க்கையில் ஈராயிரம் ஆண்டுகளாய் மாற்றம் இல்லை. ஆனால் மனித வாழ்வியலில்
நிகழ்ந்துள்ளது. இதற்கு மொழியும் மொழியால் படைக்கப்படும் இலக்கியங்களும்
காரணமாகின்றன.
அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதுதான் அறிவியல்தமிழ். அறிவியல்
மனப்பான்மை கொண்ட சமூகம் மூட நம்பிக்கையிலிருந்து விடுபடும். அதனால்
அறிவிலைப் படைக்க வேண்டும். அறிவியல் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பது
அறிவியல்தமிழின் முக்கிய நோக்கம்.
அறிவியல்தமிழ் கலைச்சொல்லாக்கத்திலும் கவனம் செலுத்துகின்றது. அறிவியல்
காலந்தோறும் வளர்வது. அதனால், ஒருமுறை கலைச்சொற்களைப் படைத்தபின் அது
நிறைவடையாது, காலந்தோறும் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். குளோனிங்,
செயற்கை நுண்ணறிவு, இயந்திரவியல், வானூர்தியியல் போன்ற துறைகளில்
கலைச்சொற்கள் மிகக் குறைவாக உள்ளன. அது குறித்த குறுஞ்செயலிகளை உருவாக்க
வேண்டும். ஒவ்வொரு துறையிலும் அவர்களுக்குத் தேவைப்படும் வகையில் கலைச்சொல்
செயலிகளை ஏற்படுத்திச் சொற்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும்.
அறிவியல் சொற்களைத் தமிழில் கலைச்சொல்லாகப் படைத்திடக் கலைச்சொல்
கோட்பாடுகள் போதுமான அளவில் வளர்ந்துள்ளன.
பதினான்கு வயதிற்குட்பட்ட சிறார் இலக்கியங்கள் தமிழ்மொழியில் மிகவும்
குறைவு. அதிலும் அறிவியல் சார்ந்த படைப்புகள் இன்னும் குறைவாக உள்ளன.
பொதுமக்களுக்கான அறிவியல், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல், துறைசார்ந்த
அறிவியல் போன்று படைப்புகளை வகைப்படுத்திப் படைக்கவேண்டும். அதில்
மொழிநடை, பத்தி, கலைச்சொல் போன்ற கூறுகளைக் கையாள வேண்டும். அதேபோல்
தமிழில் ‘தோற்ற மெய்ம்மையியல் நாவல்களும்’ (Virtual Reality Novel) பெருகி
வரவேண்டும்.
தற்போது தமிழில் தொடர்ச்சியாக வெளிவரும் படைப்பிலக்கியம் நாவல் மட்டுமே.
புதுக்கவிதைகள் மிகுதியாக வளரவில்லை. தொலைக்காட்சிகளில் அறிவியல் சார்ந்த
தொடர்கள் வெளிவருவதில்லை. அறிவியல் புனைகதைத் தொடர்கள், திரைப்படங்கள்
பெருகி வளர இத்தகைய அறிவியல் படைப்பிலக்கியம் தேவை.
அறிவியல் புனைகதைகளை, அறிவியல் படைப்புகளைப் பெருவாரியாக
நிகழ்த்தவேண்டும். அறிவியல் புனைகதைகள் சார்ந்த திரைப்படங்கள் எடுக்க வேண்டும்.
மேலைநாடுகளில் அறிவியல் படைப்பாக்கம் இயல்பாக நடைபெறுகின்றது. நம்மிடையே
வெகுசிலரே செய்துவருகின்றனர். அறிவியல் புனைகதைகளுக்கெனத் தனி
தொலைக்காட்சி அலைவரிசையை அரசாங்கம் ஏற்படுத்தி, அறிவியல் மனப்பான்மையை
ஊக்குவிக்க வேண்டும். உலகத்திற்கு வழிகாட்டியாக, முன்னோடியாகத் திகழ்ந்த ஒரு
அறிவார்ந்த சமூகம் உலகளாவிய போக்குடன் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள இது
வாய்ப்பாக அமையும்” எனப் பொழிவுரையாற்றினார்.
நிகழ்ச்சியைப் பொன்.மாணிக்கவல்லி தொகுத்து வழங்கிடப் பேராசிரியர்
முனைவர் இரா.இந்து அவர்கள் நன்றியுரை வழங்கினார்.