இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி. இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு ரோஜர் பின்னி யார் என்று பெரிதும் தெரிந்திருக்க கூடிய வாய்ப்பில்லை. அதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு உலகின் மிக வலிமையான கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கபோகும் ரோஜர் பின்னி குறித்து சற்றே விரிவாக பார்க்கலாம்.
ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் ரோஜர் பின்னி. 19 ஜூலை 1955 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். ஆல் ரவுண்டரான பின்னி இந்தியாவுக்காக தன்னுடைய முதல் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக 1979 இல் விளையாடினார். இந்தப் போட்டியில் இம்ரான் கான், சர்பராஸ் நவாஸ் பந்துவீச்சை எதிர்த்து விளையாடி 46 ரன்களை சேர்த்தார். 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இருந்தார் ரோஜர் பின்னி. அந்தத் தொடரில் மொத்தம் 18 விக்கெட்டுகளை சாய்த்தார் பின்னி. 1983 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ரோஜர் பின்னிதான். அதன் பின்பு ஆஸ்திரேலியாவில் 1985 இல் நடைபெற்ற உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் 17 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.