திருச்சி: அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரட்டை தலைமை இருந்து வந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின், ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டது. எனினும் பெரும்பாலான கட்சியினர், எடப்பாடி பக்கம் உள்ளனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அண்மையில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொது செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கவும், மக்களை சந்திக்கவும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார்.
மேலும் அதிமுகவில் தனக்கிருக்கும் செல்வாக்கை நிரூபிக்க திருச்சியில் பிரமாண்டமான முறையில் மாநாடு ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என்று ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி பொன்மலை ஜி.கார்னரில் வரும் 24ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள் விழாக்கள், அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழா என முப்ெபரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறும்.
இந்நிலையில் திருச்சி பொன்மலை ஜி கார்னரில் ஓபிஎஸ் அணி மாநாட்டையொட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு பூஜையுடன் பந்தக்கால் நடப்பட்டது. இதில் ஓ.பி.எஸ் அணி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து பிரமாண்டமான பந்தல் அமைப்பதற்காக ஜேசிபி மூலம் மாநாட்டு திடல் சுத்தம் செய்யும் பணி துவங்கியது