சியோல்: வடகொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக்கோள் ஏவுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா தென்கொரியா நாடுகளிடையேயான நீண்டநாள் மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடித்து வருகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் எரிச்சலடைந்துள்ள வடகொரியா குறுகிய ஏவுகணை சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்டதூர ஏவுகணை சோதனை, நீருக்கடியில் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கி அணு ஆயுத இலக்குகளை அழிக்கும் புதிய டிரோன் சோதனை உள்ளிட்டவைகளை செய்து வருகிறது.வடகொரியாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தென்கொரியா, ஜப்பான், அமெரிக்க நாடுகள் இணைந்து கூட்டுப் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், வடகொரிய விண்வௌி நிறுவனத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அதிபர் கிம் ஜாங் உன் ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள விண்வெளி அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பை பெறுவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் வௌியிட்டுள்ள செய்தியில், “வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. அதனை ஏவுவதற்கு அதிகாரிகளுக்கு அதிபர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் முதல் ராணுவ உளவு செயற்கைக் கோள் ஏவ தயார்: அதிபர் கிம் ஜாங் உன்
