ராஜஸ்தான் ராயலை போராடி வென்றது லக்னோ

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீசியது. லக்னோ தொடக்க வீரர்களாக கேப்டன் கே.எல்.ராகுல், கைல் மேயர்ஸ் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ராகுல் 39 ரன் விளாசி ஹோல்டர் வேகத்தில் பட்லர் வசம் பிடிபட்டார்.அடுத்து வந்த பதோனி 1 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் வெளியேற… ஹூடா 2 ரன், மேயர்ஸ் 51 ரன் எடுத்து (42 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அஷ்வின் சுழலில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ஸ்டாய்னிஸ் 21 ரன், நிகோலஸ் பூரன் 29 ரன் (20 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), யுத்வீர் சிங் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்க, லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது.

க்ருணால் பாண்டியா 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் பந்துவீச்சில் அஷ்வின் 2, போல்ட், சந்தீப், ஹோல்டர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து, 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 44 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ஜோஸ் பட்லர் 40 ரன், படிக்கல் 26 ரன் எடுத்தனர். லக்னோ பந்துவீச்சில் ஆவேஷ் கான் 3 விக்கெட், ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினர். லக்னோ அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *