காய்ச்சல் கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்  தொடங்கி வைத்தார்.

ரோசல்பட்டி கிராம துணை சுகாதார நிலையத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்  தொடங்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டி கிராம துணை சுகாதார நிலையத்தில்  இன்று(10.03.2023) காய்ச்சல் கண்டறியும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்  தொடங்கி வைத்தார்.பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு  முழுவதும் கடந்த சில தினங்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, தமிழ்நாடு முழுவதும் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டு, ஒவ்வொரு முகாமிற்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள், பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, தற்போது முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில், தேசிய குழந்தை நலத்திட்ட(RBSK) மருத்துவக்குழு மற்றும் நடமாடும் மருத்துவக்குழுக்கள் மூலம் 143 காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் வயதானவர்கள், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், தொடர் காய்ச்சல் உள்ளோர்களுக்கு பரிசோதைனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் அதிக காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டால், காய்ச்சல் சிகிச்சையுடன் அப்பகுதியில், ஒட்டு மொத்த தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல், கொசு மருந்து தெளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தற்போது பரவி வரும் காய்ச்சல் ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் ஆகும். இது சுவாச நோயை ஏற்படுத்துகிறது. இது தவிர, கடுமையான குளிரிலிருந்து வெப்பத்திற்கு வானிலை மாறும் போதும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்படலாம்.காய்ச்சல், இருமல், தொண்டை புண், தொண்டை கரகரப்பு, மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கு அடைத்தல், உடல் வலி, தலைவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை H3N2 இன்/ப்ளூயன்ஸாவின் பொதுவான அறிகுறிகளாகும். சில சமயங்களில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படலாம். இந்த பொதுவான அறிகுறிகள் ஒரு வாரத்திற்கு அல்லது அதற்கு மேலும் நீடிக்கலாம். எனவே, மருத்துவர்களை அணுகுவது நல்லது என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மற்றும் துணை சுகாதார நிலையங்களை உடனடியாக அணுக வேண்டும். பொதுமக்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் தாங்களாகவே மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.இம்முகாமில் துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மரு.யசோதாமணி உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.