சூலக்கரையில் பகுதி நேர நியாய விலை கடையினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரையில் இன்று(12.03.2023) கூட்டுறவுத்துறை மூலம் பகுதி நேர நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ,ஆ,ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களையும், 3 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகளையும் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் மொத்தம் 995 நியாய விலைக்கடைகள் இயங்கி வருகின்றன. அதில் 725 முழு நேர நியாய விலை கடைகளும், 270 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் இயங்கி வருகின்றன. மேலும், 65 நடமாடும் நியாய விலை கடைகளும் உள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் 6,10,845 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 6,00,248 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.மேலும் மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கை மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய, பகுதி நேர நியாய விலை கடைகளும் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் சூலக்கரை பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, இன்று பகுதி நேர நியாயவிலைக் கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.இக்கடையின் மூலம் 310 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.செந்தில்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.மாரிமுத்து, அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சசிகலா, அருப்புக்கோட்டை வட்டாட்சியர் திரு.அறிவழகன், வட்ட வழங்கல் அலுவலர் திரு.ஷாஜகான் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.