பல மாநிலங்களில் ஆளுநரை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில், ஆன்-லைன் சூதாட்ட தடுப்பு மசோதாவிற்கு கோளாறு செய்தால், தமிழ்நாடு ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றம் செல்லவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அறிக்கை வருமாறு:நம் நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பலவற்றிலும் – அந்த மாநிலங்களில் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். எளிதில், மக்களின் வாக்குகளைப் பெற்று, ஜனநாயக வழிமுறையான தேர்தல்மூலம் ஆட்சியைப் பிடிக்க முடியாதபோது, ‘குதிரை பேரம்‘ நடத்துவது, ஆளுங்கட்சியை உடைப்பது, சில விபீடணர்களை உருவாக்கி மகுடம் சூட்ட அவர்கள் நாக்கில் பதவித் தேனைத் தடவுவது, சில காலம் கழித்து அந்தக் கூட்டில் இடம்பெற்றிருந்துவிட்டு, தமது கட்சி (பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.) ஆட்சியாகவே நம்பிக்கை வாக்கெடுப்பு – பதவி பரமபத அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு, மக்களாட்சியின் மாண்புகளை, அரசமைப்புச் சட்ட விழுமியங்களைக் காணாமற்போகச் செய்யும் வேலைகளை மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு ‘கனகச்சிதமாக’ ஆளுநர்களை அரசியல் கருவிகளாக்கிக் கொண்டு, அரசியல் சித்து விளையாட்டுகளைத் தொடர்ந்து நடத்தி வருவது உலகறிந்த உண்மை!ஆளுநர்களும், தங்களுக்குள்ள அதிகாரம் ஏதோ வானளாவியதுபோல எண்ணிக்கொண்டு, மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிடும் மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் தராமல், எல்லையற்ற காலம் கிடப்பில் போடுவது, பல்கலைக் கழக வேந்தர் ஆளுநர் என்பதை மாற்றும் திருத்தச் சட்டங்களைக்கூட நிறுத்தி வைத்து, ஒரு போட்டி அரசு நடத்துவது, சட்டமன்றத்தினை நடத்திட தேதி தராமல், இழுத்தடிப்பது போன்ற அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளை பட்டாங்கமாய் செய்து, மேலிடத்தின் ‘’ஷொட்டுகளை’’ப் பெற்று, அதற்குமேல் பதவி ஏதாவது கிடைக்காதா என்று ‘’ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாச’’ நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற அரசியல் செப்பிடு வித்தைகளை நடத்தி வருகின்றனர்!இது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் தொடர்ந்து பல வழக்குகளில் குட்டு வைத்து சுட்டிக்காட்டி வரும் தெளிவான தீர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன நாளும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
