மத்திய அரசின் பணிகளுக்கு ஆட்கள் சேர்ப்பு வேலையை செய்து வருகிறது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். அப்படி சமீபத்தில் 9212 CRPF கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இப்பணி தேர்விற்கான முதற்கட்டமாக கணினி வழித்தேர்வு நடைபெறும்.
இரண்டு மொழியில் மட்டும் தேர்வு..
இதுவரை இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்தியா முழுவதும் உள்ள பிரதிநிதிகள் எழுதும் தேர்வில் இரண்டு மொழிகள் மட்டும் இருப்பது பெரும் அநீதியாக பல்வேறு எதிர்கட்சிகளால் விமர்சனமும் செய்யப்பட்டது.
எதிர்க்குரல் கொடுத்த தமிழகம்..
இந்நிலையில் இந்த முறை முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட பலரும் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு இது குறித்து கடிதமும் எழுதியிருந்தார். இந்த தேர்வை தமிழிலும் இதர தாய் மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.ஆனால், இதற்கு பதிலளிக்கும் வகையில், நாங்கள் இது வரை அப்படி மாநில மொழிகளில் இந்த தேர்வை நடத்தியதே இல்லை. இது வரை எந்த பிரச்சனையும் வந்ததே இல்லை என்றும் கூறியிருந்தது CRPF. இதற்கு பதிலளிக்கும் விதமாக சு.வெங்கடேசன் அவர்களும் எப்போதுமே நாங்கள் மாநில மொழிகளுக்கு அநீதி தான் இழைக்கிறோம் என்று கூறுகிறீர்களா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.இந்நிலையில் தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கும் CRPF ஆங்கிலம், இந்தியோடு சேர்த்து 13 மாநில மொழிகளில் கான்ஸ்டபிள் தேர்வை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளது. இதன்படி, தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காளி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், தெலுகு, கன்னடா, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி என 15 மொழிகளில் CRPF கான்ஸ்டபிள் தேர்வு நடைபெற உள்ளது. இதன் மூலம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது தாய் மொழியில் தேர்வெழுதி வெற்றி பெற முடியும்
CRPF கான்ஸ்டபிள் தேர்வை தமிழோடு சேர்த்து 13 மொழிகளில் நடத்த உத்தரவு
