கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் தொடங்க அரசு முன்வருமா.

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று (19.04.2023) சட்டமன்ற உறுப்பினர்
.A.நல்லதம்பி  எழுப்பிய வினாக்களுக்கு  கூட்டுறவுத்
துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்  கீழ்க்காணும் பதில்
அளித்துள்ளார்.
கேள்வி: போளூர் தொகுதி, கரைப்பூண்டி பகுதியில் கூட்டுறவு மேலாண்மை

பயிற்சி நிலையம் தொடங்க அரசு முன்வருமா?

பதில்: போளூர் தொகுதி, கரைப்பூண்டி பகுதியில் கூட்டுறவு மேலாண்மை
பயிற்சி நிலையம் அமைப்பதற்கு திட்டம் எதுவும் தற்போது இல்லை.
தமிழகத்தில் இதுவரை 22 பட்டயப் படிப்புகள் படிக்கின்ற பயிற்சி
நிலையங்கள் இருக்கின்றன. தற்போது நடைபெற்ற நிதிநிலை
அறிக்கையில், மானியக் கோரிக்கையில், இராமநாதபுரம்
மாவட்டத்தில் புதிதாக பயிற்சி நிலையம் ஒன்று அமைக்க அறிவிப்பு
வெளியிடப்பட்டது.

விவாதம்

உறுப்பினர்அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலையில் மட்டும்
தற்போது கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.
1989 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம், வட ஆற்காடு
வட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட பின்பு தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி
நிலையம், தற்போது வாடகை கட்டடத்தில்தான் பல ஆண்டுகளாக செயல்பட்டு
வருகிறது. திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் இந்தப் பயிற்சி
நிலையத்திற்கு வசதிகளுடன்கூடிய சொந்தக் கட்டடம் கட்ட அல்லது
மாவட்டத்தின் மையப் பகுதியான அனைத்து போளூரில் ஒருங்கிணைந்த
அனைத்து வசதிகளுடன்கூடிய புதிய மேலாண்மை பயிற்சி அடிப்படை
நிலையம் அமைக்க அரசு மறு பரிசீலனை செய்யுமானால், அதற்கான
இடத்தையும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
நிதியையும் வழங்குகிறோம் என்றும், இதுபோன்று மாநிலத்தில் எத்தனை
மேலாண்மை பயிற்சி நிலையங்கள் உள்ளன என்றும், எத்தனை வாடகை
சுட்டடங்களில் செயல்படுகிறது என்றும், ஆண்டுதோறும் எவ்வளவு
மாணவர்கள் கூட்டுறவு பட்டயப் பயிற்சியில் சேர்க்கப்படுகின்றனர்
என்பதையும் தங்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.
மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள்
மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிடுவது, திருவண்ணாமலை
மாவட்டத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு இந்தப் பயிற்சி பள்ளி
தொடங்கப்பட்டது. வாடகை கட்டடத்தில் இருந்தாலும், தான் இடம்
தருகிறேன், கட்டடம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை
அந்த மையப் பகுதியில் இப்போது இருக்கக்கூடிய இடத்தில் இரண்டு
அறைகள்தான் இருக்கின்றன. வாடகை கட்டடத்தில்தான் இருக்கிறது.
எதிர்காலத்தில் புதிதாக ஒரு பயிற்சி பட்டய பள்ளி தொடங்குவதைவிட,
தேவையான அளவிற்கு இப்போது எதிர்காலத்தில் சொந்தக் கட்டடத்தில்
கட்டுவதற்கு துறை பரிசீலிக்கும்.
உறுப்பினார் அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி

அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பேரவைத் தலைவர்
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவுத் துறையின் அலுவலர்களின்
செயல் திறனை மேம்படுத்தும் பொருட்டு, பூனே, ஆனந்த், பெங்களூர், லக்னோ,
கொல்கத்தா, பரிதாபாத், புதுடெல்லி ஆகிய கூட்டுறவுப் பயிற்சி
நிலையங்களுக்கு அலுவலர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடியாக தமிழ்நாடு
போற்றப்படுகிறது. இந்தியாவின் முதல் கூட்டுறவுச் சங்கம் 1904 ஆம் ஆண்டு,
திருவள்ளூர் மாவட்டம், திரூரில் தொடங்கப்பட்டது. இதுபோன்ற பல
முதன்மைகள் மாநிலத்தில் உள்ளன என்பதை அறிந்த மாண்புமிகு முன்னாள்
முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் , தமிழ்நாட்டில் கூட்டுறவுத்
துறையில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்படும்
நிர்வாகக் குழு பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும்
பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொருட்டு மற்ற மாநிலங்களில்
செயல்படும் பயிற்சி நிறுவனங்களைப்போல தேசிய அளவிலான கூட்டுறவு
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
சேலம் மாவட்டம், ஏழைகளின் இளவரிசி என்று அழைக்கப்படுகின்ற ஏற்காடு
மஞ்சக்குட்டை பகுதியில் மாநில கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய
கூட்டுறவு வங்கிகள் நிதியிலிருந்து அமைக்க, அரசாணைகள் வெளியிடப்பட்டு,
நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு, 25% பணிகள்
முடிந்துள்ள நிலையில், தற்போது அதனை மாற்றப் போவதாகச்
சொல்கிறார்கள். அது உண்மையா, இல்லையா என்பதை
கூட்டுறவுத் துறை அமைச்சர்  தெரிவிக்க வேண்டும்.
கூட்டுறவுத் துறை அமைச்சர்
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் புதிதாக
கொடைக்கானலில் இதுபோன்ற ஒரு பயிற்சி நிலையம் 100 கோடி ரூபாய்
மதிப்பீட்டில், சென்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டு, அது இப்போது
பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே, எல்லா இடங்களிலும் பயிற்சி
வேண்டுமென்பது நோக்கம் அல்ல. இருக்கின்ற இடங்களில் உள்ளவர்களுக்கு
பயிற்சி அளிப்பது ஏதுவாக இருக்கும். உறுப்பினர் அவர்கள் கேட்ட
கேள்வி, மூலக் கேள்விக்கும் அதற்கும் தொடர்பில்லை. தேவையிருந்தால்,
அக்கறையிருந்தால், அதற்குத் தனியாக கேள்வி எழுப்பினால், முழுமையான
விவரம் அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *