உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மோத உள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் அணியில் இடம் பிடித்துள்ளார்.ஒருநாள், டி20 உலக கோப்பை போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2021 முதல் நடத்தப்படுகிறது. முதலாவது உலக டெஸ்ட் சாம்பியஷிப் பைனலில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. 2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (66.67%), இந்தியா (58.8%) முதல் 2 இடங்களை பிடித்தன. இதையடுத்து, உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான பைனலில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் அரங்கில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு இன்னும் ஒன்றரை மாத அவகாசம் உள்ள நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது அணியை நேற்று அறிவித்தது. தாயார் காலமானதால் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த பேட் கம்மின்ஸ், மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீவன் ஸ்மித் துணை கேப்டனாக செயல்படுவார்.

இந்திய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றிருந்த ஹேண்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் ஏகார், மிட்செல் ஸ்வெப்சன், குனேமன் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். முழங்கை காயம் காரணமாக விலகிய வார்னர் (36 வயது), தற்போது முழு உடல்தகுதியுடன் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதை அடுத்து அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய நாதன் லயன், டாட் மார்பி, ஆல் ரவுண்டர் கேமரான் கிரீன், பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசல்வுட், ஸ்காட் போலண்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிட்செல் மார்ஷ் 2019 ஆஷஸ் தொடருக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் அணிக்குள் நுழைந்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான 17 பேர் கொண்ட ஆஸி. அணி அடுத்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.

ஆஷஸ் தொடர்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பிறகு, ஆஸி. அணி இங்கிலாந்துக்கு எதிராக பாரம்பரியமிக்க ‘ஆஷஸ் தொடரில்’ விளையாட உள்ளது. மொத்தம் 5 போட்டிகளை கொண்ட அந்த தொடரின் முதல் 2 டெஸ்டில் இதே அணி நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 16ல் பர்மிங்காமில் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28ல் தொடங்கும்.ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், மேத்யூ ரென்ஷா, மார்னஸ் லாபுஷேன், ஸ்டீவன் ஸ்மித் (துணை கேப்டன்), டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கேமரூன் கிரீன், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட், ஸ்காட் போலண்ட், நாதன் லயன், டாட் மார்பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *