சசிகலா, விஜயபாஸ்கர், சந்தேகவலையில்-ஆறுமுகம் அறிக்கை

TN
TN சென்னை, அக்.18

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை சந்தேகிப்பதாக ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.மேலும் அந்த ஆணையம் தெரிவித்துள்ள தகவலில், “வி.கே.சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போலோ மருத்துவமனையின் பிரதாப் ரெட்டி ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஜெயலலிதா மரணம் குறித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறிக்கையை நாங்கள் ஏற்கவில்லை. ஜெயலலிதா இறந்த நாள் நேரம் குறித்து முரண்பட்ட தகவல்கள் உள்ளன. சாட்சியங்கள் ஜெயலலிதா இறந்த நேரம் 4-ம் தேதி மதியம் 3.30 என கூறியுள்ளன. ஆனால் மருத்துவமனை வெளியிட்ட தகவலின்படி, ஜெயலலிதா 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு மரணித்ததாக தெரிகிறது. இப்படி முரண்பட்டு உள்ளன இறப்பு தேதி, நேர விவரங்கள்.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த தகவல்கள் எல்லாம், சசிகலாவால் ரகசியம் ஆக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே முன்பு பிளவு ஏற்பட்டது. பின் அவர்கள் இணைந்தனர். இணைந்தபோதும்கூட, அவர்கள் இருவருக்குமான உறவு சுமூகமானதாக இல்லை. அமெரிக்காவிலிருந்து வந்த மருத்துவர் தமீன் சர்மாவால், ஜெயலலிதாவுக்கு இறுதியாக ஆஞ்சியோ / அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அது அவரது இறுதிமூச்சு வரை அவருக்கு கிடைக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவக்குழு, 5 முறை அப்போலோ வந்திருந்தாலும்கூட, ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதையெல்லாம் வைத்து பார்க்கையில், சசிகலாவை குற்றம் சுமத்துவதை விடுத்து, வேறெந்த முடிவுக்கும் வர முடியவில்லை எங்களால் 2012-முதலேவும் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே நல்லுறவு இல்லை என்பது சாட்சியங்கள் வழியாக தெரிகிறது. குறிப்பாக கிருஷ்ணப்பிரியாவின் சாட்சியத்தின்படி இது உறுதியாக தெரியவருகிறது. ஜெயலலிதாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சேவை செய்ததால் மட்டுமே மீண்டும் சசிகலா போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அந்த சாட்சியத்தின் படி தெரிகிறது. ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவுடன், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார் என்பது உண்மை. ஆனால் அதற்கு பிந்தைய தகவல்கள்தான் சசிகலாவால் ரகசியமாக்கப்பட்டிருக்கிறது” என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை, மிகப்பெரிய அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவருகிறது. இந்த விசாரணையின் அடிப்படையில் அரசு என்ன முடிவுகளை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *