50 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற ஊழியர் கைது.

சென்னையில் சம்பளம் தராததால் தங்க நகை பட்டறை அதிபர்களை கட்டிப்போட்டு 50 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற ஊழியர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை சென்னை பூங்கா நகர் ராயப்பா செட்டி தெருவில் ஒரு வீட்டின் முதல் மாடியில் உள்ள அறையில் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த சலாவுதீன் (வயது 26) மற்றும் சஜித் (26) ஆகிய இருவரும சேர்ந்து தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகின்றனர். இருவரும் அங்ேகயே தங்கி உள்ளனர். இவர்களிடம் அதே மாநிலத்தைச் சேர்ந்த சுகந்த் ராய் (27) மற்றும் அஜய் (23) ஆகிய இருவரும் 4 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தனர். இவர்களும் நகை பட்டறை அதிபர்களுடன், அதே அறையில் தங்கி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு சுகந்த்ராய், அஜய் இருவரும் தங்களுக்கு சம்பளம் தரும்படி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுகந்த்ராய், அஜய் இருவரும் சேர்ந்து நகை பட்டறை அதிபர்களான சலாவுதீன், சஜித் இருவரையும் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்களின் கை, கால்களை கட்டிப்போட்டதுடன், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளையும் அவிழ்ந்து நிர்வாணமாக்கினார்கள். பின்னர் நகைப்பட்டறையில் இருந்த 50 பவுன் நகையை கொள்ளையடித்தனர். மேலும் நகைப்பட்டறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டனர். இதற்கிடையில் நகைப்பட்டறை அதிபர்களை இவர்கள் தாக்கியபோது இருவரும் வலி தாங்காமல் அலறினார். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த யானைக்கவுனி போலீசார், முதல் மாடியில் இருந்து சத்தம் வருவதை கேட்டு அங்கு வந்து கதவை தட்டினர். போலீசாரை கண்டதும் பயந்துபோன சுகந்த்ராய், அஜய் இருவரும் கொள்ளையடித்த நகையுடன் பின்பக்க வழியாக தப்பிச்சென்றனர். போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நகைப்பட்டறை அதிபர்கள் இருவரும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடல் முழுவதும் காயத்துடன் ரத்தம் கொட்டியது. அத்துடன் அறை முழுவதும் கியாஸ் பரவி இருப்பதையும் கண்டனர். உடனடியாக போலீசார் எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கியாஸ் பரவலை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. படுகாயம் அடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பின்பக்கம் சென்று பார்த்தபோது ஊழியர்கள் இருவரும் தப்பிச்செல்வதை கண்டு விரட்டிச்சென்றனர். தங்கசாலை ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் தெரு அருகே சுகந்த் ராயை மட்டும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 50 கிலோ நகைைய பறிமுதல் செய்தனர். இதுகுறித்து யானை கவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அஜயை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *