பண்பாட்டுப் பயிற்சி : தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவிப்பு

அயல்நாட்டவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் மொழி-பண்பாட்டுப் பயிற்சி :
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவிப்பு
தமிழ்ப்பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ் வளர் மையம் மூலமாக ஜெர்மனியின் புகழ்பெற்ற
கொலோன் பல்கலைக்கழகத் தெற்காசிய-தென்கிழக்காசிய மொழிகள் துறை
மாணவர்களுக்குத் தமிழ்மொழி-பண்பாட்டுப் பயிற்சி வழங்கும் பயிலரங்கத்தின்
நிறைவுவிழா இன்று (17.03.2023)நடைபெற்றது. இப்பயிற்சியில் பங்கேற்ற ஜெர்மனி
நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கிப் பேசிய துணைவேந்தர்
முனைவர் வி.திருவள்ளுவன், அயல்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இனி ஆண்டுதோறும்
இருவாரக்காலத் தமிழ்மொழி-பண்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
கொலோன் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் முனைவர் ஸ்வென் வர்ட்மன்
தலைமையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையம் மூலமாக தமிழ்மொழிப்
பண்பாட்டுப் பயிற்சிகள் 5 நாட்கள் வழங்கப்பட்டன. இதில் உலகமொழிகளில் தமிழ்
பெறுமிடம் குறித்து பேராசிரியர் கு.வெ.பாலசுப்ரமணியம், ஓலைச்சுவடிகள் குறித்த காட்சி
விளக்கத்தைப் முனைவர் கோவைமணி, மரபுசார் தமிழ் மருத்துவமுறைகள் பற்றி
முனைவர் அன்பு ஜெப சுனில்சன், கடல்சார் தமிழக வரலாறு குறித்து முனைவர்
செல்வக்குமார் ஆகியோர் வகுப்புகள் எடுத்தனர். பல்கலைக்கழக நூலகம் பற்றி முனைவர்
வேல்முருகன், பல்கலைக்கழக அருங்காட்சியக வரலாறு குறித்து முனைவர் இராஜா
ஆகியோரும் நேரடி விளக்க உரைகளை வழங்கினர். மேலும் ஜெர்மனி மாணவர்களுக்கு,
ஒயிலாட்டம், சிலம்பம், பறை இசைப்பயிற்சிகளும் நாள்தோறும் வழங்கப்பட்டன. பெரிய
கோயில் ஆய்வு, சரசுவதிமகால் நூலக ஆய்வு என்று மாணவர்களுக்கான பாட
அட்டவணையைத் தமிழ் வளர் மைய இயக்குநர் முனைவர் குறிஞ்சிவேந்தன் வகுத்து
அமைந்திருந்தார்.
இப்பயிலரங்கத்தின் நிறைவுவிழாவில் மாணவர்கள் தங்களின் பயிற்சி குறித்த
விளக்கங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய முனைவர்
ஸ்வென் வர்ட்மன், கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் தமிழரல்லாத அயலக
மாணவர்களுக்கான பயிலரங்கம் பெரும் பயனைத் தந்தது என்றும், இப்பயிற்சிகளை
ஆண்டுதோறும் வழங்கிட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்வில்
பல்கலைக்கழகப் பதிவாளர்(பொ) முனைவர் தியாகராஜன் வரவேற்புரையும், கலைப்புல
முதன்மையர் முனைவர் இளையாப்பிள்ளை வாழ்த்துரையும், பயிலரங்க
ஒருங்கிணைப்பாளர் முனைவர் குறிஞ்சிவேந்தன் பயிலரங்க அறிக்கையையும் வழங்கினர்.
ஜெர்மனி மாணவர்கள் சார்பில் தில்சன் நன்றியுரையை நல்கினார். மாணவர்கள்
திரளாகப் பங்கேற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர்
முருகன் உள்ளிட்ட பேராசிரியர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *