ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இரண்டு இந்திய இராணுவ அலுவலர்களுக்கு இரங்கல்

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஹெலிகாப்டர் விபத்தில்
உயிரிழந்த இரண்டு இந்திய இராணுவ அலுவலர்களுக்கு இரங்கல்
மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ அலுவலர் மேஜர். A.
ஜெயந்த் அவர்களது குடும்பத்தினருக்கு நிதியுதவி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்அறிவிப்பு

நேற்று (16.03.2023) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் இராணுவ
பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ அலுவலர்
மேஜர்.A. ஜெயந்த் உட்பட இரண்டு இராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர்
விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும்,
வேதனையும் அடைந்து இன்று காலை என்னுடைய ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்திருந்தேன்.
மேலும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர்
திரு.ஐ.பெரியசாமி அவர்களை நேரில் சென்று, தாய்நாட்டைக் காக்கும் அரிய
பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து, வீரமரணமெய்திய இராணுவ
வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திட
அறிவுறுத்தினேன்.
தாய்நாடு காக்கும் பணியின்போது இன்னுயிர் ஈந்த மேஜர். A. ஜெயந்த்
அவர்களின் குடும்பத்தினருக்கு மீண்டும் எனது ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூபாய் இருபது இலட்சம் நிதியுதவி
வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *