ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இந்திய குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.அப்போது, வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலமாக வருகிற நிதிகளை முறைப்படுத்த வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:- வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகள் பலவும் முறையாக பயன்படுத்தப்படாமல் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன. நம்முடைய நாடு வேகமாக வளர்ந்து வரும் சூழலில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு நாடுகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கூடங்குளம் அணுஉலை, விளிஞ்சம் துறைமுக திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்ட வெளிநாட்டுநிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்திலும் இதுபோன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் ஜனநாயகப்படி ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். இந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் வருத்தமான நிகழ்வு. வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நாட்டுக்கெதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எப்சிஐ நிதியை முறைப்படுத்தி உள்ளது என்று கூறினார். மேலும் அவர், பேரவை தீர்மானங்களை கவர்னர் நிலுவையில் வைத்தால் நாகரீகமாக நிராகரிப்பதாக பொருள். நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்று பொருள் என சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு கூறுகிறது. பொதுப்பட்டியலில் உள்ளவைக்கு மத்திய அரசு சட்டம் இயற்றாவிடினும் மாநில அரசு சட்டம் இயற்றலாம். ஆனால் மாநில அரசின் சட்டம் மத்திய அரசின் சட்டத்துடன் பொருந்த வேண்டும். பேரவையின் தீர்மானம் அரசியல் அமைப்பின் விதிக்கு உட்பட்டு இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *