சென்னை: யார் யாரோ தமிழ்நாட்டை வெல்லலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால் அந்த விளையாட்டில் வெல்ல முடியாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.யாரிடம் எப்போது மோத வேண்டும் என்பதை தந்தை பெரியார் எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது பதில் அளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் இதனை தெரிவித்தார். உதயநிதி அமைச்சரான பின்னர் முதன்முறையாக தனது துறை மீதான மானியக்கோரிக்கைக்கு இன்று பதில் அளித்து பேசினார்.மாமன்றத்தின் நியாயமான ரெப்ரியாக பேரவை தலைவர் செயல்படுவதாகவும், யார் யாரோ தமிழ்நாட்டை வெல்லலாம் என்று நினைத்து அதற்கான முயற்சி செய்வதாகவும், ஆனால் வடக்கில் இருந்து வந்த யாரும் இங்கு வென்றது இல்லை எனவும் கூறினார். இதற்கு காரணம் திமுக என்ற வலுவான அணியும் ஸ்டாலின் என்ற கேப்டன் இருப்பதும் தான் எந்த நேரத்தில் யாருடன் மோத வேண்டும் என பெரியார் சொல்லிகொடுத்து இருப்பதாகவும், ஒற்றுமையுடன் எப்படி இருக்க வேண்டும் என்று அண்ணா சொல்லிக் கொடுத்துள்ளதாவும், எந்த பந்தை அடிக்க வேண்டும், எந்த பந்தை அடிக்கக்கூடாது என்று கலைஞர் சொல்லிக் கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்தார்.அதோடு, எப்போதெல்லாம் டிபன்ஸ் ஆட வேண்டும், எப்போதெல்லாம் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்லிக் கொடுத்துள்ளார் என்றும் உதயநிதி கூறினார். ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவிற்கு நேற்று ஒரு சிக்சரை அடித்த முதல்வர் ஸ்டாலின், டெல்டா நிலக்கரி சுரங்கம் ரத்து என இரண்டு சிக்ஸர்களை விளாசியுள்ளார் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உற்சாகமாக பேசினார்.