வேளாண்மை நிதிநிலை அறிக்கை! மக்கள் நீதி மய்யம் வரவேற்பு.

விவசாயிகளின் வாழ்க்கை செழிப்பதற்கான பல திட்டங்களானது தமிழ்நாடு அரசின்  வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இதற்காக வனப் பாதுகாவலர் தலைமையில் தனிக் குழு அமைத்துள்ளது வரவேற்கத்தக்கது.

தற்போதைய அவசியத் தேவை, அறுவடை செய்யப்பட்ட விளை பொருட்களைப் பாதுகாப்பதாகும். இதற்காக, ரூ.22 கோடியில் ஒழுங்குமுறைக் கூடங்களுக்கு கூடுதல் கட்டமைப்புகள், விழுப்புரம், தஞ்சை, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் பரிவர்த்தனைக் கூடங்கள், உலர் களங்கள், சேமிப்புக் கிடங்குகள் அமைத்தல் ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேளாண்மை, தோட்டக்கலை பட்டம் பெற்ற 200 இளைஞர்களை தொழில் முனைவோராக்க, தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பு, இளைய தலைமுறைக்குப் பேருதவியாக இருக்கும்.  சாகுபடி காலத்தில் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஆறுதல் அளிக்கும்.

விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிப்பதும், சிறந்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்குவதும் அவர்களை ஊக்குவிக்கும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக ரூ.6,536 கோடி ஒதுக்கீடு, கூடுதல் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்குதல், ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.11 கோடி மானியம் ஆகிய திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. அதேபோல, ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் விநியோகம், விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள், ஆராய்ச்சி மையங்கள், காவிரிப் படுகை பெருந்திட்டத்துக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டவை.

கிராம வளர்ச்சி, தன்னிறவை ஊக்குவிக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

நெல், கரும்பு விவசாயிகளுக்கான திட்டங்கள், மதுரை மல்லிகை, பலா, முருங்கைப் பயிர்களுக்கு தனி இயக்கம், மிளகாய் மண்டலம்,  ஆண்டு முழுவதும் தக்காளி, வெங்காயம் சீராக கிடைக்க நிதி ஒதுக்கீடு, குளிர்கால காய்கறிகள் சாகுபடிக்கு மானியம் என பல்வேறு பயிர்களுக்கும் பிரத்யேக திட்டங்களை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியவை.

சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100, பொதுரக நெலுக்கு குவிண்டாலுக்கு ரூ.75 அதிகமாக வழங்கப்படும். 25 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்புகள் நெல் விவசாயிகளுக்குப் புத்துயிரூட்டும்.

வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பண்ணைச் சுற்றுலா செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, எதிர்காலத் தலைமுறைக்கு விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
மொத்தத்தில் தமிழக அரசின் வேளாண்மை நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு மட்டுமின்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *