வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் எண்ணெய் வித்துக்களுக்கானவிலை முன்னறிவிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக
மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்
திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது, எண்ணெய் வித்துக்களுக்கான விலை
முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அ. நிலக்கடலை
வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன் கூட்டிய
மதிப்பீட்டின் படி, இந்தியாவில் 2022-23 ஆம் ஆண்டு நிலக்கடலை 60.15 இலட்சம் எக்டர்
பரப்பளவில் பயிரிடப்பட்டு 85.82 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் எனக்
கணித்துள்ளது. குஜராத் (45 %) , இராஜஸ்தான் (18 %), தமிழ்நாடு (9%), மத்திய பிரதேசம்
(6%) ஆந்திரா பிரதேசம் (6%) மற்றும் கர்நாடகா (5%) ஆகிய மாநிலங்கள் நாட்டின்
நிலக்கடலை உற்பத்தியில் 89 சதவீதம் பங்களிக்கின்றன.
இந்தியாவில் நிலக்கடலை உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடும்
ஒன்றாகும். இங்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 9.49 இலட்சம் டன்கள் உற்பத்தி
செய்யப்படுகிறது. திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர்,
கடலூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் தர்மபுரி ஆகியவை நிலக்கடலை பயிரிடும்
முக்கிய மாவட்டங்களாகும்.

விலை முன்னறிவிப்புத் திட்ட குழு, கடந்த 12 ஆண்டுகளாக திண்டிவனம்
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய நிலக்கடலை விலை மற்றும் சந்தை
ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அறுவடையின் போது

(மே’2023) தரமான நிலக்கடலை பண்ணை விலை கிலோவிற்கு ரூ.75 முதல் 80 வரை
இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கோடைக்கால இறவை வரத்தை பொறுத்து
நிலக்கடலை விலையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள்
மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு
பரிந்துரைக்கப்படுகின்றனர்.
ஆ. எள்
வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன் கூட்டிய
மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 2022-23 ஆம் ஆண்டு எள்சுமார் 17.23 இலட்சம் எக்டர்
பரப்பளவில் பயிரிடப்பட்டு 7.49 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் எனக்
கணித்துள்ளது. மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், இராஜஸ்தான், உத்திரபிரதேசம்,
குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் எள் அதிகளவு பயிரிடப்படுகிறது.
தமிழ்நாட்டில், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 0.52 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு
0.34 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும். விழுப்புரம், ஈரோடு, தஞ்சாவூர், கரூர்,
சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் சித்திரை பட்டம், ஆடி பட்டம், கார்த்திகை
பட்டம் மற்றும் மாசி பட்டங்களில் எள்விதைக்கப்படுகிறது
சிவப்பு எள் வகைகள் எண்ணெய் உபயோகத்திற்கும், கருப்பு எள் வகைகள்
முக்கியமாக மிட்டாய்களில் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை எள் ஏற்றுமதிக்கும்
அதிகளவில் உபயோகிக்கப்படுகிறது. இந்திய எள் முக்கியமாக அமெரிக்கா, வியட்நாம்,
தென் கொரியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ஆரோக்கியமான உணவு முறை காரணமாக எள் மற்றும் எள் தொடர்பான
பொருட்களுக்கான நிலையான தேவைகள் உள்ளது.

விலை முன்னறிவிப்புத் திட்ட குழு, கடந்த 12 ஆண்டுகளாக சிவகிரி ஒழுங்குமுறை
விற்பனைக் கூடத்தில் நிலவிய எள் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், அறுவடையின் போது (மே’2023) தரமான எள்
பண்ணை விலை கிலோவிற்கு ரூ.120 முதல் 125 வரை இருக்கும் எனக்
கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை
அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *