வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமா? மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும்!

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக மாற்ற அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்க என்று  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (21.4.2023) அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி யிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்துவது தொடர்பான மசோதா இன்று (21.4.2023) சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு

இதனைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகள் உள்பட வெளிநடப்பு செய்துள்ளன.

‘‘வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழ் நாட்டை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும்  என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்தத் தொழி லாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது சம்பந்தமாகக் குழு அமைக்கப் படும்” என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் விளக்கம்!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் பேசுகையில்,

‘‘வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும். இந்த நேரத்தை 4 நாள்களில் முடித்துவிட்ட பிறகு, அய்ந்தாவது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்குச் சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக் கும் இந்தச் சட்டம் இல்லை. விரும்பக் கூடிய தொழிற் சாலைகள் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

1945 இல் பெற்றுத் தந்த உரிமை

நாளொன்றுக்கு 14 மணிநேரம் உழைப்பு என்ற ஒரு காலகட்டம் இருந்ததுண்டு.

1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத்கர்  அவர்களின் முயற்சியால் தொழிலாளர் பிரதிநிதி, ஆலை உரிமையாளர் பிரதிநிதி, அரசுப் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவில் முத்தரப்பு ஒப்பந்த அடிப்படையில், தொழிலாளர் பணிநேரம் 8 மணிநேர மாகக் குறைக்கப்பட்டது என்பது வரலாறு.

இப்பொழுது நாம் பின்னோக்கிப் பயணிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

நெகிழ்வுத்தன்மை எங்கிருந்து வந்தது?

இதில் நெகிழ்வுத் தன்மை எங்கிருந்து வந்தது? சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானதல்லவா!

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல!

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல!

இதில் வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், நலம், குடும்ப நலன் என்பவை முக்கிய மாகக் கருத்தூன்றி கவனிக்கப்படவேண்டாமா?

விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே!

தேவை மறுபரிசீலனை!

எல்லா வகைகளிலும் மக்கள் நலன் கருதி செயல்படும் ‘திராவிட மாடல்’ நல்லரசுக்கு ஏற்படக் கூடிய இந்த அவப்பெயரை – பழியைத் தவிர்க்கவேண்டும்!

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *