வெப்பநிலையை இயல்பைவிட அதிகரித்தேக் காணப்படும் எனக் கூறப்பட்டிருந்தது

மதிப்பிற்குரிய அமைச்சருக்கு,வணக்கம், கடந்த 28.02.2023 அன்று ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும்  நாட்டில் ஏற்படவுள்ள வெப்ப அலை தாக்கம் குறித்தான சுற்றறிக்கை அனுப்பியிருந்தை தாங்கள் அறிவீர்கள். இந்த சுற்றறிக்கையானது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 28.03.2023 தேதியிட்ட மார்ச் – மே மாதம் வரையிலான வானிலை கணிப்புகள் தொடர்பானது என்பதையும் தாங்கள் அறிவீர்கள். அச்சுற்றறிக்கையில் இக்கோடை காலமானது வழக்கத்தைவிட வெப்பமிகுந்ததாக இருக்கும். குறிப்பாக வடகிழக்கு, மத்திய, கிழக்கு இந்தியப் பகுதிகள் முழுமையாகவும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும். தென்தீபகற்ப இந்தியாவைத் தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதிகளிலும் வெப்பநிலையை இயல்பைவிட அதிகரித்தேக் காணப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும் வெப்பம் தொடர்பான நோய்களுக்கான தேசிய அளவிலான திட்டத்தின்படி (National Action Plan on Heat related illness) நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் 1ஆம் தேதி முதல் வெப்ப சார்ந்த நோய்கள் குறித்தான தகவல்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்சுற்றறிக்கையில் தமிழ்நாடு தொடர்பில் குறிப்பாக எந்த அறிவுறுத்தலும் இல்லையென்றாலும் கடந்த சில நாட்களாக கோடையின் தீவிரம் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இயல்பை விட சற்று அதிகரித்தேக் காணப்படுகிறது. எனவே வெப்பம் அலைத் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராவது மிகவும் அவசியமாகும். 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெப்ப அலை பாதிப்பை எதிர்கொள்வதற்கான திட்டத்தை வெளியிட்டிருந்தது. நடப்பாண்டில் எல் நினோ ஆண்டாக இருக்கும் என பன்னாட்டு வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. எனவே, இயல்பைவிட அதிகமான வெப்பம் நிலவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் பொருட்டு உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோருகிறோம்.

கூடுதலாக கீழ்க்கண்ட கோரிக்கைகளையும் முன்வைக்கிறோம்.

  1. வெப்பத்தின் அளவைக் கருத்தில்கொண்டு வேலை நேரங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என தனியார், அரசு நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும்.
  2. அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்வதோடு Integrated Health Information Platform -ல் அவற்றைப் பதிவு செய்ய அனைத்து மருத்துவமனைகளுக்கும் உரிய ஆணை பிறப்பிக்கக் கோருகிறோம்.
  3. கோடை காலத்தை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்.
  4. பேரிடர் ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்படுவதுபோல வெப்ப அலை தாக்கக் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த ஒத்திகைப் பயிற்சிகளை அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் வழங்க வேண்டும் எனக் கோருகிறோம்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாகவே தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் மேற்கூறிய கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *