வீ.ப.ஜெயசீலன்,தொடங்கி வைத்து, இந்த பாரம்பரிய மரபு பயணத்தில் கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்களை காண்பதற்கான ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  வீ.ப.ஜெயசீலன்,தொடங்கி வைத்து, இந்த பாரம்பரிய மரபு பயணத்தில் கலந்து கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த விருதுநகர் மாவட்டத்திலுள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்களை காண்பதற்கான ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  வீ.ப.ஜெயசீலன் அவர்கள் இன்று(18.04.2023) தொடங்கி வைத்து, இந்த பாரம்பரிய மரபு பயணத்தில் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள் குறித்து, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, இந்த ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

இந்த  ஒரு நாள் பாரம்பரிய மரபு பயணத்தில் மூவரை வென்றான் பகுதியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான இடைக்கால பாண்டியர்காலத்து மலைக்கொழுந்தீஸ்வரர் குடைவரை கோயில், அங்கு உள்ள கல்வெட்டுகளில் முதலாம் மாரவர்ம சுந்தரப்பண்டிய முடிசூட்டு விழாவின் செய்திகள் இடம்பெற்றுள்ளதையும், அதற்கு பின் ஆண்ட குலசேகர பாண்டியனின் ஆட்சிகாலத்தில் காரான்மை கானியாக 10 நபர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியும்,

குன்னூரில் உள்ள ஏறத்தாழ 2500 ஆண்டுகள் பழமையான வரலாற்று ரீதியாக ஒரு குழுத்தலைவன் அல்லது சமூக தலைவன் மரணமடையும் போது நினைவுச் சின்னமாக எழுப்பப்படும், சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்ட சுமார் 20 அடி உயரமுள்ள நெடுங்கல் உள்ளதையும்,

கிருஷ்ணன்கோவில் மலை அடிவாரத்தில் சிதரிய நிலையில் உள்ள உடைந்த முதுமக்கள் தாழி ஓடுகள், தாழியுடைய வாய் விழிம்புகள், சிறு மண்பாண்ட ஓடுகள்,

திருவில்லிபுத்தூர்- மதுரை சாலையில் திருமலை நாயக்கர் காலத்தில் பயணமாக செல்லும் பொதுமக்கள் தங்குவதற்காக கலைசிற்பங்களுடன் கட்டப்பட்ட கல்மண்டபம், மன்னர் தங்குவதற்காக கட்டப்பட்ட தங்கும் விடுதி கட்டடத்தையும்,

கிபி 1623 முதல் கிபி 1659 வரை ஆண்ட திருமலைநாயக்கர் மன்னர், ஆண்டாள் திருக்கோவிலுக்கு வரும் போது தங்குவதற்காக வட்டவடிவிலான முற்றம், அலங்காரங்கள், ஓவியங்களுடன் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அரண்மனை, பின்னர் 19 ஆம் நூற்றாண்டில் நீதிமன்றமாக செயல்பட்ட வரலாற்று சின்னங்களையும், இந்த பாரம்பரிய மரபு பயணத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் கண்டுகளித்தனர்.

இந்த சுற்றுலா மூலம் மாவட்டத்தில் உள்ள தொன்மையான, பாரம்பரியம் மிக்க இடங்களை வெளிக்கொணர்ந்து உலகயறிய செய்வதே நோக்கம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சுற்றுலாவின் போது தெரிவித்தார்.
இப்பயணத்தில், மாவட்ட சுற்றுலா அலுவலர் அன்பரசன் உட்பட மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *