வளர்ந்த கதை சொல்லவா” நூலினை வெளியிட்டு ஆற்றிய உரை.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று
(25.3.2023) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், தமிழ்நாடு பாடநூல்
கழகத்தின் தலைவர் திரு. திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் எழுதிய
“வளர்ந்த கதை சொல்லவா” நூலினை வெளியிட்டு ஆற்றிய உரை.
கழகத்தினுடைய கொள்கைப் பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல்
கழகத்தின் தலைவருமான நம்முடைய அன்பிற்கினிய
திரு. திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள் எழுதிய “வளர்ந்த கதை சொல்லவா”
என்கிற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று, அந்த நூலினை
பெற்றுக்கொண்டு அதற்குரிய தொகையும் வழங்கி வாழ்த்துரை வழங்கி
அமர்ந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும்,
நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவருமான என்னுடைய அன்பிற்கினிய
நண்பர் திரு. டி.ஆர். பாலு அவர்களே,
கழகத்தினுடைய துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்
என்னுடைய அன்பிற்கினிய சகோதரர் திரு. ஆ. ராசா அவர்களே,
கழகத்தினுடைய துணைப் பொதுச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர்
அன்பிற்குரிய திரு. அந்தியூர் செல்வராஜ் அவர்களே,
தொடக்கத்தில் அனைவரையும் மகிழ்ந்திருக்கக்கூடிய மாண்புமிகு பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களே,
கழகத்தின் செய்தி தொடர்பு தலைவர்
திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
மாண்புமிகு பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர்
திருமதி பிரியா அவர்களே,
சென்னை மேற்கு மாவட்டத்தினுடைய செயலாளர் திரு. சிற்றரசு உள்ளிட்ட
மாவட்டக் கழக, பகுதிக் கழக, கிளைக்கழக நிர்வாகிகளே,
இந்த விழாவினுடைய நாயகன் நம்முடைய அன்பிற்கினிய திண்டுக்கல்
ஐ.லியோனி அவர்களே,
நூல் திறனாய்வு உரையாற்றிருக்கக்கூடிய எழுத்தாளர்
திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே,
நிறைவாக நன்றியுரை ஆற்றியிருக்கக்கூடிய தம்பி லியோ சிவக்குமார்
அவர்களே,
வருகை தந்திருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களே,
கழகத்தினுடைய முன்னோடிகளே,

ஆன்றோர்களே, சான்றோர்களே,
பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே,
என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர்
கலைஞர் அவர்களின் உயிரினும், உயிரான அன்பு உடன்பிறப்புக்களே,
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
நம்முடைய டி.ஆர்.பாலு அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறபோது,
திண்டுக்கல் லியோனி அவர்களை அண்ணன் என்று விளித்தார்கள். நான்
உடனே லியோனி அவர்களிடத்தில் உங்கள் வயது என்ன என்று கேட்டேன்,
65, வருகிற 27 ஆம் தேதி 66 ஆக பிறக்கப் போகிறது என்று சொன்னார். 66
வயதை 27 ஆம் தேதி காண இருக்கக்கூடிய அவருக்கு முன்கூட்டியே நான்
உங்கள் அனைவரின் சார்பில் அவருக்கு என் வாழ்த்துகளை முதலில்
தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதே நேரத்தில் அவரே அதற்கு விளக்கம் சொல்லிவிட்டார், என்னை
அவர் அண்ணன் என்று அழைத்து அவரை நான் தம்பி என்று அழைக்கலாமா
என்றுகூட ஒரு வினாவை எழுப்பியிருக்கிறார். எனக்கே திண்டுக்கல்
லியோனி அவர்கள் தம்பி தான், வயதைப் பொறுத்தவரைக்கும். எனக்கு 70,
பாலுவுக்கு 80-ஐ தாண்டியிருக்கிறது. எனவே, அப்படிப்பட்ட இந்த நிகழ்வில்
நானும் கலந்துகொண்டு லியோனி அவர்கள் எழுதியிருக்கக்கூடிய அந்தப்
புத்தகத்தை வெளியிட்டு அவரை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பு
எனக்கு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த
வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அவருக்கு மட்டுமல்ல,
அவருடைய துணைவியாருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் நான் இந்த
நேரத்தில் என்னுடைய நன்றியை காணிக்கையாக்க விரும்புகிறேன்.

இதுவரைக்கும், தான் வளர்ந்த கதையைத்தான் பேச்சு வழியாக
நம்முடைய லியோனி அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இப்போதுதான் முதன்முதலாக தான் வாழ்ந்த கதையை, வளர்ந்த கதையை
எழுத்தாகவும் சொல்லத் தொடங்கியிருக்கிறார்.
பாலு அவர்கள் “பாதை மாறா பயணம்” என்ற அந்தப் புத்தகத்தை நான்
வெளியிட்ட நேரத்தில் நான் எடுத்துவைத்த அந்த வேண்டுகோளை ஏற்றுக்
கொண்டு அதை நிறைவேற்றியிருக்கிறேன் என்று அவரே இங்கு எடுத்துச்
சொன்னார். ஆகவே, அதற்காக நான் மீண்டும் அவருக்கு என்னுடைய
நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அவருடைய பேச்சு மாதிரியே எழுத்தும் அவருக்கு கை வந்திருக்கிறது.
எல்லோருக்கும் இப்படி பேச்சும் – எழுத்தும் ஒன்றாக கை வராது.
அவருடைய எழுத்தும் சுவையாகத்தான் இருக்கிறது.
பட்டிமன்ற மேடைகளில் லியோனியுடைய அடைமொழியே
‘நகைச்சுவைத் தென்றல்’தான். தென்றல் எப்படி மிருதுவாக வருடி, ஒரு
இதமான உணர்வை கொடுக்குமோ, அதே மாதிரி அவருடைய ‘டைமிங்
ஜோக்ஸ்’ இருக்கின்றதே அதே மாதிரிதான் இருக்கும். அது பட்டிமன்றமாக
இருந்தாலும் சரி, பாட்டுமன்றமாக இருந்தாலும் சரி, கருத்தரங்கமாக
இருந்தாலும் சரி, விவாத மேடைகளாக இருந்தாலும் சரி,
பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சியினுடைய
விவாதங்கள், எதுவாக இருந்தாலும், தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால்,
அந்த மேடையில் இருக்க்கூடிய பார்வையாளர்களை மட்டுமல்ல,
வந்திருக்கக்கூடிய உங்களையும் தன்வசப்படுத்தக்கூடிய ஒரு ஆற்றல்
அவருக்கு இருக்கிற காரணத்தால்தான் அவரை ‘நாவரசர்’என்று கூட

சொல்லலாம். அந்த அளவிற்கு ஒரு ஆற்றலைப் பெற்றிருக்கக்கூடியவர்
நம்முடைய லியோனி அவர்கள்.
ஆரம்பக் காலங்களில் தமிழ்நாடே அவருடைய உரைகளை
நேரடியாவும், கேசட்டுகள் வாயிலாவும் கேட்டு, மெய் மறந்து இருந்தது.
தமிழ்நாடே மயங்கியபோது நான் மட்டும் விதிவிலக்கா என்ன? காரில்
போகும்போதெல்லாம் அவருடைய கேசட்டுகளை நான் கேட்பதுண்டு.
அவருடைய பட்டிமன்ற கேசட்டுகளை தொடர்ந்து நான் இளைஞர்
அணியின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது, தமிழ்நாடு முழுவதும் நான்
சுற்றுப்பயணம் காரில்தான் செல்வேன். என்னோடு இளைஞர் அணியில்
பொறுப்பேற்றுக் கொண்டிருந்த திருச்சி சிவா அவர்கள், நம்முடைய சகோதர்
பரணி குமார் அவர்கள், என்னுடைய உயிர் நண்பன் அன்பில்
பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் சேர்ந்து காரில் ஒன்றாக கிளம்புவோம்.
பெரும்பாலும் பரணிகுமார் தான் பகலில் கார் ஓட்டுவார். டிரைவர்
இருப்பார், ஆனால் டிரைவர் கார் ஓட்டமாட்டார், பின்னால் காரில் வருவார்.
அவருடைய வேலை என்ன என்றால், நாங்கள் எங்கேயாவது காரை
விட்டால், திருப்பி நிறுத்தி வைப்பவது, எடுத்து விடுவது, அதுதான்
அவருடைய வேலை. பகலில் அவர் ஓட்டுவார், இரவு முழுவதும் நான்
ஓட்டுவேன். ஏனென்றால், இரவில் நான் எப்போதும் தூங்கமாட்டேன்.
இப்போது எப்படி தூங்காமல் இருக்கிறேனோ அப்போதும் அப்படித்தான்.
ஏன் தூங்காமல் இப்படி கண் விழிக்கிறீர்கள் என்று இப்போதும் பலர்
கேட்கிறார்கள். இது புதியதல்ல, பழையது, எனக்கு பழகிப் போய்விட்டது.
இரவெல்லாம் கார் ஓட்டிக்கொண்டு போவோம். ஒவ்வொரு மாவட்டமாக
சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அன்றைக்கு இரவே இன்னொரு
மாவட்டத்திற்கு சென்றுவிடுவோம். அப்படி காரில் போகின்றபோது

தொடர்ந்து நம்முடைய லியோனி அவர்களுடைய கேசட்டுக்ளைத்தான்
நான் கேட்டுக் கொண்டு வருவேன். அதைக் கேட்டுக்கொண்டு போனால்
நேரம் போவதே தெரியாது.
அவ்வளவு சுவாரஸ்யமாக பேசுவார். நகைச்சுவையோடு இருக்கும்,
சிரித்துக்கொண்டே, நாங்கள் பேசிக்கொண்டு கேட்டுக்கொண்டு செல்வோம்.
அப்படி கேட்டுகேட்டு, அவருடைய ஃபேனாகவே நான் மாறிவிட்டேன்.
இந்த நூலில் கூட குறிப்பிட்டிருக்கிறார், பேசும்போது கூட சொன்னார்.
நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, வேளச்சேரி
பகுதியில்தான் குடியிருந்தேன். அப்படி
குடியிருந்தபோது, வேளச்சேரியில் ஒரு சங்கத்தை ஏற்படுத்தி
வைத்திருந்தோம். அந்தப் பகுதிக்கு சீதாபதி நகர் என்று பெயர். சீதாபதி நகர்
அசோசியேஷன் என்று ஒரு பெயர் வைத்து ஒரு அமைப்பை நடத்திக்
கொண்டிருந்தோம். அந்த அமைப்பின் சார்பில் நம்முடைய திண்டுக்கல்
லியோனி அவர்கள் பட்டிமன்றத்தை பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்த
வேண்டும் என்று முடிவு செய்து நடத்தினோம். அந்த நிகழ்ச்சி நடந்து
முடிந்ததற்குப் பிறகு அவர் அதில் என்ன பாட்டு பாடினார், என்ன பாட்டு
பாடி முடித்தார் என்பதை அவரே பாடிக் காண்பித்தார். அது என் நினைவில்
பசுமையாக ஆழமாக பதிந்திருக்கிறது. அதை முடித்ததற்குப் பிறகு நான்
வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு விருந்து வைத்தேன். அவருக்கு
மட்டுமல்ல, அவருடைய குழு அத்தனை பேரும் இருந்து
சாப்பிட்டுவிட்டுதான் சென்றார்கள். அன்றிலிருந்து அவரோடு என்னோடு
நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

முதன்முதலாக 1996-ஆம் ஆண்டு கழக மேடைக்கு நான்தான்
முதன்முதலில் அவரை அழைத்துக் கொண்டு சென்றேன். இளைஞரணி
சார்பில் தலைவர் கலைஞருடைய பவள விழா சிறப்பு பட்டிமன்றத்தில்
அவரை பங்கேற்க வைத்தேன். அப்போதெல்லாம் அவர் திமுக-வின் மெம்பர்
கிடையாது. 2006 ஆம் ஆண்டுதான் அவர் மெம்பர் ஆகிறார்.
அப்போதெல்லாம் பேண்ட் தான் போட்டுக் கொண்டிருப்பார். 2006 ஆம்
ஆண்டு முதல்முதலில் வேட்டி கட்ட வைத்தது நான்தான். நான்தான்
முதல்முதலில் தலைவரிடம் கொடுத்து அவரிடத்தில் வேட்டி கொடுத்து
இருவண்ண கருப்பு சிவப்பு வண்ணம் போட்ட அந்த வேட்டியை அவரைக்
கட்டவைத்தேன். அடுத்த 15 ஆண்டுகள் அவர் தமிழ்நாட்டையே வலம்
வந்தார். வலம் வந்தார் என்றால், அவருடைய பட்டிமன்றங்கள் மூலமாக
மூடநம்பிக்கைகளை கேள்வி கேட்டார்; பகுத்தறிவு கருத்துகளை பரப்பினார்;
நாமெல்லாம் பெரிதும் மதிக்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள்
மாதிரியே பாட்டெல்லாம் பாடி பட்டிமன்றத்தை அவர் நடத்துவார். இது
எல்லாவற்றையும் ஜனரஞ்சகமாக பேசுவார். அதுதான் அவருடைய சிறப்பே!
அந்த பட்டிமன்றத்திற்கு தலைப்பை பார்த்தீர்களன்றால் கவர்ச்சியாக
இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *