வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி: உ.பி. பா.ஜ.க. நிர்வாகிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு

வட மாநில தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய உத்திர பிரதேச பாஜக செய்தி தொடர்பாளருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. வதந்தி பரப்பியதாக உத்தரப்பிரதேச பாஜ செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரசாந்த் உம்ராவ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்மீத் சிங் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பிரசாந்த் உம்ராவ் மீது தவறாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகள் நீண்ட தூரத்தில் உள்ளன. அதனால் 12 வார காலம் இடைக்கால முன்ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, விமானம் மூலம் செல்லலாம் அது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது என தெரிவித்தார்.இதையடுத்து முன் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஹெக்டே மற்றும் ஜோசப் அரிஸ்டாட்டில் ஆகியோர், இந்த விவகாரத்தில் பிரசாந்த் உம்ராவ் செய்தது சட்ட விதிகளுக்கு முரணானதாகும். மேலும் அவர் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் வகையிலான தவறான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாக கூட அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.அவரது செயல்பாட்டால் தமிழக மக்களுக்கும், வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. வேண்டுமென்றே புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பி உள்ளனர். இதையடுத்து மாநில அரசு மற்றும் தமிழக காவல்துறையின் சிறப்பான அணுகு முறையால் தற்போது அது வதந்தி என்று நிரூபணம் செய்யப்பட்டு, இப்போது மாநிலத்தில் அமைதியான சூழல் நிலவுகிறது.இருப்பினும் இதுபோன்ற சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையிலான செயலில் ஈடுபட்ட பிரசாந்த் உம்ராவ் தவறு செய்து விட்டு இதுவரையில் மன்னிப்பு கூட கேட்கவில்லை. இவரது செயல்பாடு ஒட்டுமொத்த இந்தியாவையே பிளவுபடுத்தும் செயலாகும். அதனால் பிரசாந்த் உம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்க கூடாது. மேலும் அவரை தமிழக காவல்துறையிடம் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “பிரசாந்த் உம்ரா மீது தமிழகத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பத்து நாட்களுக்குள் அதாவது மார்ச் 20ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும். இதைத்தொடர்ந்து சம்பந்தபட்ட நீதிமன்றத்தில் மனுதாரர் முறையிட்டு நிவாரணம் கேட்கலாம். மேலும் பிரசாந்த் உம்ராவ் தனது வீட்டு முகவரி, தொடர்பு எண்கள் ஆகிய அனைத்தையும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்களிடம் வழங்க வேண்டும்” எனஉத்தரவிட்டு, இது தொடர்பான வழக்கை முடித்து வைத்தார்.இந்நிலையில் பிரசாந்த் உம்ரா முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், மனுதாரர் சமூக வலைதள பதிவை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அவரது செயலால் இந்தியா முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானது. இதனால் மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது.மனுதாரர் தரப்பில், மனுதாரர் அவராக கருத்து பதிவு செய்யவில்லை; ஒரு பதிவை மறு பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுதரரரின் செயலால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது; இது போன்ற செயல்களை ஏற்க முடியாது; மனுவுக்கு தூத்துக்குடி போலிசார் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக் கிழமைக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *