லக்னோ பந்துவீச்சில் அடங்கியது ராஜஸ்தான்; டாப் ஆர்டரை வீழ்த்தியதால் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டி

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் நேற்றிரவு ஜெய்ப்பூரில் ராஜஸ்தான்-லக்னோ அணிகள் மோதின. முதலில் ஆடிய லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மெயர்ஸ் ஆகியோர், டிரெண்ட் பவுல்ட் பந்துவீச்சில் கடுமையாக தடுமாறினர். பவர்பிளே முடிவில் லக்னோ அணி 37 ரன்களை மட்டுமே எடுத்தது. ராகுல் 39 ரன், மெயர்ஸ் 51 ரன்னில் ஆட்டமிழந்தனர். பதோனி 1 ரன்னிலும், பிறந்தநாளில் ஆடிய தீபக் சாஹர் 2 ரன், ஸ்டாய்னிஸ் 21 ரன், நிக்கோலஸ் பூரான் 29 ரன்கள் எடுக்க லக்னோ 7 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அஸ்வின் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர், பொறுமையாக விளையாடினர். ஜெய்ஷ்வால் 35 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தார். பட்லர் 41 பந்துகளில் 40 ரன்கள் தான் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 87 ரன்கள் சேர்த்தது. சஞ்சு சாம்சன் 2 ரன்களில் ரன் அவுட் ஆனது ஆட்டத்தில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. எதிர்பார்க்கப்பட்ட ஷிம்ரன் ஹெட்மயர் 5 பந்தில் 2 ரன்னில் அவுட்டானார். கடைசி 3 ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 18வது ஓவரில் ராஜஸ்தான் வீரர் படிக்கல் 3 பவுண்டரி அடித்து 13 ரன்கள் சேர்த்தார். கடைசி 2 ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரியான் பராக் ஒரு சிக்சர் அடித்து 10 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஸ்கான் வீசிய அந்த ஓவரின் 3 மற்றும் 4வது பந்தில் தேவ்தத்படிக்கல் (26ரன்), துருவ்ஜூரெல் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ராஜஸ்தான் அணி 144 ரன்களே எடுத்தது. லக்னோ 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2 விக்கெட் மற்றும் 21 ரன்கள் எடுத்த லக்னோ அணி வீரர் ஸ்டாய்னிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றி குறித்து லக்னோ கேப்டன் கேஎல்ராகுல் கூறுகையில், “10 ஓவர் முடிவில் ஆடுகளம் தொய்வாக இருந்ததை நானும் கைல்மெயர்சும் உணர்ந்து கொண்டோம். இதனால் இந்த மைதானத்தில் 160 என்ற இலக்கே போதுமானது என மற்ற அணியினருக்கு கூறிவிட்டோம். ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே நினைத்ததை விட 10 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். எனினும் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அந்த குறையை தீர்த்துவிட்டனர். நாங்கள் பந்து வீசும் போது பனிப்பொழிவு ஏற்படவில்லை. நாங்கள் நேற்று இந்த மைதானத்தில் பயிற்சி செய்யும் போது இங்கு 180 ரன்கள் போதுமானதாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் ட்ரெண்ட் பவுல்ட் முதல் ஓவர் வீசியபோது நானும் மெயர்சும் இது 180 ரன்கள் அடிக்கும் ஆடுகளம் கிடையாது என நினைத்தோம்.

பந்து கொஞ்சம் மெதுவாக பேட்டிங்கிற்கு வருகிறது. எனவே பவர் பிளேவில் விக்கெட்டை கொடுக்காமல் பொறுமையாக விளையாடுவோம் என பேசி முடிவு எடுத்தோம். நாங்கள் கொஞ்சம் அதிரடி காட்டி இருந்தால் 170 ரன்கள் என்ற இலக்கை தொட்டு இருப்போம். எனினும் மிஸ்ரா செய்த ரன் அவுட், தொடர்ந்து இரண்டு விக்கெட் விழுந்தது எதிரணிக்கு சாதகமாக மாறிவிட்டது. ராஜஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய டாப் 4 வீரர்கள் தான் என்று தெரியும். எனவே அவர்களுக்காக தனி திட்டத்தை வகுத்திருந்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது’’ என்றார்.

எளிய இலக்கை எட்டாதது வருத்தம்தான்!: தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், “தோல்விக்கு பின் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. ஆனால் பரவாயில்லை. இந்த ஆட்டத்தின் மூலம் நாங்கள் பல பாடங்களை கற்றுக்கொண்டு அடுத்த போட்டி நோக்கி செல்ல வேண்டும் என நினைக்கிறேன். இதுபோன்ற பலமான பேட்டிங் வரிசையை வைத்துக்கொண்டு இந்த இலக்கை எட்ட முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. லக்னோ வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆடுகளம் மிகவும் தொய்வாக இருந்தது. இதை நான் ஆரம்பத்திலேயே எதிர்பார்த்தேன். இதுபோன்ற ஆடுகளத்தில் கொஞ்சம் அறிவுப்பூர்வமாக விளையாட வேண்டும்.

முதல் ஒன்பது ஓவர் வரை அப்படித்தான் விளையாடினோம். ஆனால் ஜெய்ஸ்வால் ஆட்டம் இழந்த பிறகு ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தால் வெற்றியை எட்டி இருக்கலாம். நாங்கள் அதிரடியாக ஆட முயற்சி செய்யும் போதெல்லாம் விக்கெட்டுகளை இழந்தோம். இந்த ஆடுகளத்தில் 30 பந்துகளில் 50 ரன்கள் எடுக்கவேண்டும் என்பது கொஞ்சம் கடினமான காரியம். நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு லக்னோவை 154 ரன்களில் சுருட்டினோம். நான் எங்கள் வீரர்களிடமிருந்து இன்னும் சிறப்பான செயல்பாட்டை எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் நாம் எந்த அளவுக்கு நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். அடுத்த போட்டியில் இதை சரி செய்வோம் என நம்புகிறேன்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *