ராகுல், மம்தா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரபலங்களின் புளூ டிக் குறியீடு நீக்கம்: டிவிட்டர் நடவடிக்கை

சான்பிரான்சிஸ்கோ: ராகுல் காந்தி, மம்தா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பிரபலங்களின் புளூ டிக் குறியீட்டை டிவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. டிவிட்டர் சமூக வலைதளத்தை டெஸ்லா,ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் ரூ.3.30 லட்சம் கோடிக்கு வாங்கினார். அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் அதிகாரப்பூர்வ கணக்கை அடையாளம் காண ‘புளூ டிக்’ வசதி பயன்படுத்தப்படுகிறது. இலவசமாக வழங்கப்பட்ட இந்த சேவைக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்தார். இந்தியாவை பொறுத்தவரை புளூ டிக் வசதிக்கு மாதம் ரூ.650 என அறிவித்தார்.

இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவரை அமெரிக்கா, கனடா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து,பிரிட்டன் மற்றும் இந்தியா இது அறிமுகப்படுத்தப்பட்டது. ஏற்கனவே, பணம் செலுத்தாமல் புளூடிக் அங்கீகாரம் பெற்றிருந்த பல பிரபலங்கள் சந்தா செலுத்தவில்லை. இதனால் நேற்று இந்த பிரபலங்களின் புளூ டிக் குறியீட்டை டிவிட்டர் நிர்வாகம் நீக்கியது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்,டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல மாநில முதல்வர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன்,ஷாருக் கான், சல்மான் கான்,நடிகைகள் ஆலியா பட், அனுஷ்கா சர்மா புளூ டிக் வசதியை இழந்துள்ளனர்.

மேலும், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட பலர் தங்களின் புளூ டிக் குறியீட்டை இழந்துள்ளனர். ஆனால், பிரதமர் மோடி,ஒன்றிய அமைச்சர்கள், பாஜ மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ கணக்குகளில் இந்த வசதி தொடர்ந்து நீடிக்கிறது.

* 3 லட்சம் பேர் டிவிட்டர் வெரிபைட் பயனாளர்கள் பிரிவில் புளூ டிக் குறியீடு கொண்டவர்கள் 3 லட்சம் பேர் இருந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர் அரசியல் பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆவர். சர்வதேச பிரபலங்கள் போப்பாண்டவர் பிரான்சிஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரும் புளூ டிக் அங்கீகாரத்தை இழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *