உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று சட்டப்பேரவைக்கு வந்தார். அவரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து அவைக்கு வந்த அவர் தனது வெற்றிக்காக பிரசாரம் செய்த அமைச்சர்களுக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் மீதான முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையில் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பிறகு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலினின் துறைகளின் மீது நடந்த விவாதத்திற்கு பதில் அளித்து பேசுவதை கேட்பதற்காக வந்தேன். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெறும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ராகுல் காந்தியை பொறுத்தவரை அவருடைய தாத்தா, பாட்டனார் காலத்தில் இருந்து அந்த குடும்பம் இந்த நாட்டிற்கு சேவை செய்து தியாகம் செய்துள்ளனர். பிரமாண்டமான தங்களது ஆனந்த பவன் இல்லத்தை நாட்டிற்காக கொடுத்தவர்கள். ஆகவே அவர்களை எப்படியாவது அடக்கி விடலாம். சட்டத்தின் பெயரால் எப்படியாவது முடக்கி விடலாம் என்று நினைத்தால் அது கண்டிப்பாக நடக்காது.சட்டமன்றத்திற்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் முதல்வரின் பேச்சை கேட்கும் போது மிகவும் நன்றாக இருந்தது. கலைஞர் பேசுவது போல் அவரது பேச்சு இருந்தது. என்னை பொறுத்தவரை எனது பொது வாழ்வில் மூன்று பேருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கின்றேன். நடிகர் சிவாஜி கணேசன், சோனியா காந்திக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். அதேபோல் நம்முடைய முதல்வர் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய மு.க.ஸ்டாலினுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.இவ்வாறு அவர் பேசினார்.