ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

பெரம்பூர்: சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரிமுனையில் திமுக சார்பில் ரமலான் பெருநாள் விழா நேற்று நடந்தது. அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, 2 ஆயிரம் இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், தயாநிதி மாறன் எம்பி, எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், சென்னை மாநகர மேயர் பிரியா, பேராசிரியர் அப்துல் காதர் உள்ளிட்டோரும், திமுக நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களும் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

எனது தொகுதியில், என் சார்பில் 20 ஆயிரம் இஸ்லாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது உள்பட தொடர்ந்து, ரமலான் திருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளேன். வருடம் முழுவதும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். எப்போதுமே மக்களுடன் இருக்கும் இயக்கம் திமுக. குறிப்பாக, இஸ்லாமிய மக்களுடன் நெருக்கமாக இருக்கும் இயக்கம். கண்ணியமிக்க காயிதே மில்லத் காலத்தில் இருந்து, திமுக எப்போதுமே இஸ்லாமிய மக்களுக்கு துணையாக நின்று கொண்டு இருக்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுத்து களத்திற்கு வருவது திமுகதான். அதனால் கலைஞரை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என்ற பாராட்டை முதலமைச்சர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *