அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்
திரு. முகுல் வாஸ்னிக், எம்.பி., இன்று (31.3.2023) சென்னை சத்தியமூர்த்தி பவனில்
நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்ட அறிக்கை:
தனது நெருங்கிய நண்பர் அதானிக்காக ஜனநாயகத்தை அழிக்க பிரதமர் மோடி தயாராகிவிட்டார்.
அதானியைப் பற்றி கேட்பதால் தான் தலைவர் ராகுல் காந்தி குறி வைக்கப்படுகிறார்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க இந்திய தேசிய காங்கிரஸ் அனைத்தையும் செய்யும்.
கடந்த 2023 பிப்ரவரி 7 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி சாதாரண 2 கேள்விகளைத்
தான் கேட்டார் :-
(1) அதானியின் போலி நிறுவனங்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி வந்துள்ளது. இந்தத் தொகையை
அதானி ஈர்த்திருக்க வாய்ப்பில்லை. அவர் அடிப்படை கட்டமைப்பு தொடர்பான வணிகத்தையே
செய்கிறார். பிறகு இந்த பணம் எங்கிருந்து வந்தது ? இது யாருடைய பணம்? இந்த போலி
நிறுவனங்கள் எல்லாம் யாருடையது ? இந்த நிறுவனங்கள் எல்லாம் பாதுகாப்புத் துறையில்
பணிகளைப் பெற்று செய்து கொண்டிருக்கின்றன. ஏன் யாருக்கும் தெரியவில்லை. யாருடைய பணம்
இது? இதில் சீனப் பிரஜை சம்பந்தப்பட்டிருக்கிறார். அந்த சீன பிரஜை யார் என்று எவரும் கேள்வி
எழுப்பாதது ஏன்? யாரிந்த சீன பிரஜை ? இதுவே முதல் கேள்வி.
(2) அதானியுடன் பிரதமருக்கு என்ன உறவு? அதானிக்குச் சொந்தமான விமானத்தில் பிரதமர் மோடி
ஓய்வு எடுக்கும் படத்தை ராகுல் காந்தி வெளியிட்டிருந்தார். பாதுகாப்புத் துறை, விமான நிலையங்கள்
குறித்த ஆவணங்களையும், இலங்கை மற்றும் வங்காள தேசம் வெளியிட்ட அறிக்கையையும்
வெளியிட்டிருந்தார். அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் கொடுத்ததாகக் கூறப்படும்
ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய ஸ்டேட் வங்கியின் தலைவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் அந்தப்
படத்தில் அமர்ந்திருக்கிறார். இது ஆதாரத்துடனான இரண்டாவது கேள்வி.
* அதானியின் முறைகேடு குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றி 9 நாட்கள் ஆன
நிலையில், அவர் மீதான அவதூறு வழக்கு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதானியின் முறைகேடு குறித்த
மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேச்சும், மக்களவையில் ராகுல் காந்தி
பேசிய பேச்சும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
* பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி நடந்து கொண்டிருக்கும் நிலையில்,
வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளும் கட்சியான பா.ஜ.க. நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளது.
இது அதானியை காப்பாற்ற நடக்கும் திசைதிருப்பு முயற்சியாகும். ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள் கூட்டு
நாடாளுமன்றக் குழு விசாரணை கோரியதை ஆளும் பாஜக கண்டுகொள்ளவில்லை.
* ராகுல் காந்தியை பாஜக அமைச்சர்கள் தாக்கிப் பேசினர். தமக்குப் பேச வாய்ப்பு தருமாறு, 2 முறை
எழுத்துப்பூர்வமாகவும் ஒருமுறை நேரிலும் சந்தித்து சபாநாயகரைக் கேட்டுக் கொண்டும் ராகுல்
காந்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதிலிருந்து அதானியுடனான தமது உறவை வெளிப்படுத்த
பிரதமர் மோடி விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
* கீழ்க்கண்ட 3 முக்கிய குற்றச்சாட்டுகள் மூலம் பா.ஜ.க.வின் திசைதிருப்பும் உத்தி
நிரூபிக்கப்பட்டுள்ளது.
1. லண்டனில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவுக்கு உதவ வெளிநாட்டுச் சக்திகளைக் கேட்டுக்
கொண்டதாகக் கூறுவது பச்சைப் பொய்.
இங்கிலாந்தில் ராகுல் காந்தியின் பேச்சுகளை யாராவது முழுமையாகப் பார்த்தால், அதுபோன்ற
கருத்துகளை அவர் பதிவு செய்யவில்லை என்பது புரியும். அவர் அங்கு பேசும்போது, ‘‘ இது எங்கள்
பிரச்சனை ( மோடி தலைமையில் ஜனநாயக அமைப்புகள் அழிக்கப்படுவது); இது உள்நாட்டுப்
பிரச்சினை மற்றும் இது இந்தியாவின் பிரச்சினை. நாங்களே தீர்வு காண்போம். வெளியிலிருந்து தீர்வை
தேடமாட்டோம்’’ என்று தான் குறிப்பிட்டார்.
2. இரண்டாவதாக, பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்டதால் பின்தங்கிய வகுப்பினரை ராகுல் காந்தி குறி
வைப்பதாக தற்போது பொய் கட்டுக்கதையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இது பாஜகவின் மற்றொரு
திசைதிருப்பும் உத்தி. ஒற்றுமையை வலியுறுத்தி 4 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு இந்திய ஒற்றுமை
யாத்திரையை நடத்திய ஒருவரால், குறிப்பிட்ட சமூகத்தை எப்படிக் குறி வைக்க முடியும்?
3. மூன்றாவதாக, இதன்பிறகு தான் பாஜகவின் தகுதிநீக்கம் வந்தது. குஜராத் மாநிலம், சூரத் கீழமை
நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை
மின்னல் வேகத்தில் தகுதி நீக்கம் செய்தனர். உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள்
நீதிமன்றம் கால அவகாசம் அளித்தும் தகுதிநீக்கம் செய்வதில் அவசரம் காட்டியுள்ளனர். ராகுல்
காந்தியைப் பார்த்து பாஜக பயப்படுவதற்குக் காரணம் என்ன?
* பின்தங்கிய சமூகம் அவமானப்படுத்தப்பட்டது தெளிவாக நிரூபிக்கப்பட்டதாக பாஜக தேசிய
தலைவர் ஜேபி. நட்டா மலிவான பேச்சை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதலாவதாக, ராகுல் காந்தி பேசிய அந்தப் பேச்சில், மோடி என்று முடியும் பெயர் கொண்டவர்கள்
(நிரவ் மோடி, லலித் மோடி மற்றும் நரேந்திர மோடி) திருடர்களாக இருப்பது ஏன்? என்று கேள்வி
எழுப்பியிருந்தார். மோடி என்ற சாதிப் பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்கள் என்று அவர்
சொல்லவில்லை. இதில் எந்த சமுதாயமும் குறிவைக்கப்படவில்லை.
இரண்டாவதாக, நிரவ் மோடியோ லலித் மோடியே மிகவும் பின்தங்கியவர்கள் அல்ல. மேலும்
அவர்கள் எந்த சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்கள் மோசடி செய்யவில்லையா? இந்த
மோசடிப் பேர்வழிகளை பாஜக ஏன் பாதுகாக்கிறது?
மூன்றாவதாக, காங்கிரஸ் கட்சி சார்பில் பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்த 2 முதலமைச்சர்கள்
பதவியில் இருக்கிறார்கள். பின்தங்கியவர்களுக்கான மதிப்புமிக்க பங்களிப்பைக் காங்கிரஸ் கட்சி
அளிப்பது இதன்மூலம் விளங்கும்.
* ராகுல் காந்தியோ காங்கிரஸோ இதைப் பார்த்துப் பயந்துவிடப்போவதில்லை. இந்திய ஒற்றுமை
நடைப்பயணத்தின் போது மக்களை நேரில் சந்தித்தோம். அப்போது விலைவாசி உயர்வு,
வேலையின்மை, சமூக சமத்துவம் மற்றும் அரசு அமைப்புகள் கைப்பற்றப்பட்டது போன்ற அவர்களது
கருத்துகளை அறிந்தோம். மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம். எங்கள் செய்தியை
தொடர்ந்து மக்களுக்கு நேரடியாகக் கொண்டு செல்வோம்.
* கிரிமினல் அவதூறு வழக்கில் அதிகபட்ச 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பது இதுவரை
கேள்விப்படாதது. ஒருபுறம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருக்கும் நிலையில்
இதுபோன்ற வழக்கைக் கேள்விப்படவில்லை. அதேசமயம், பாஜக தலைவர்களுக்கு எதிரான
வழக்குகளில் மெத்தனம் காட்டப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் உத்தரப்பிரதேசம் மாநிலம் பாண்டா
பா.ஜ.க. எம்பி ஆர்கே.சிங் பட்டேல்ரயிலை நிறுத்தி, சாலை மறியல் செய்து, கல்வீச்சில்
ஈடுபட்டபோது போலீஸ் அதிகாரி படுகாயமடைந்தார். ஆனால் அவருக்கு ஓராண்டு மட்டுமே
சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
* மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திரபோஸ், சர்தார் பட்டேல், மவுலானா
ஆசாத் ஆகியோரை தேசத்துரோகக் குற்றச்சாட்டுகள் கூறியோ, சிறைத்தண்டனை வழங்கியோ தான்
பிரிட்டிஷார் தண்டனை அளித்தனர். அத்தகைய பிரிட்டிஷாரையும் காங்கிரஸ் வென்றெடுத்தது.
திருடர்களையும் முறைகேடு செய்தவர்களையும் அம்பலப்படுத்திய ராகுல் காந்தியை தற்போது மோடி
அரசு குறி வைக்கிறது. காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்.
அவதூறு வழக்கு நடந்த காலம் :
2019 ஏப்ரல் 13- கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
2019 ஏப்ரல் 16- குஜராத் மாநிலம் சூரத் கீழமை நீதிமன்றத்தில் பாஜக எம்எல்ஏ புர்னிஷ் மோடி புகார்
தாக்கல் செய்தார்.
2022 மார்ச் 7- தான் கொடுத்த புகாருக்கே குஜராத் உயர்நீதிமன்றத்தில் புகார்தாரர் புர்னிஷ் மோடி
தடையாணை பெற்றார்.
2023 பிப்.7- மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான
உறவு குறித்து கேள்வி எழுப்பினார்.
2023 பிப்.16- குஜராத்தில் தான் பெற்ற தடையாணையை புகார்தாரர் புர்னிஷ் மோடி திரும்பப்
பெற்றார்.
2023 பிப்.27- கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்.
2023 மார்ச் 23- ராகுல் காந்தியை தண்டித்த நீதிமன்றம், அதிகபட்சமாக 2 ஆண்டுகள்
சிறைத்தண்டனை வழங்கியது.
2023 மார்ச் 24- தீர்ப்பு வெளியான 24 மணி நேரத்துக்குள் மக்களவை செயலாளர் ராகுல் காந்தியின்
எம்பி பதவியைத் தகுதி நீக்கம் செய்தார்.
*