மீன்பிடி உரிமம் மீன்பிடியை பழைய முறையில்‌ நடத்த வேண்டும்-ஆண்டிபட்டி பகுதி மீனவர்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி : வைகை அணை மீன்பிடி உரிமம் தனியார் வசம் சென்ற நிலையில், மீன்பிடியில் பழைய முறைப்படி பங்கு அடிப்படையில் நடத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இந்த வைகை அணை விவசாயம் மற்றும் குடிநீருக்கு மட்டுமல்லாமல் பொழுதுபோக்கு சுற்றுலா தளத்திற்கும் சிறப்பம்சமாக உள்ளது.

இதற்கெல்லாம் அடுத்தப்படியாக வைகை அணையில் மீன்பிடி நடந்து வருகிறது. 1958ம்‌ ஆண்டு கட்டப்பட்ட வைகை அணையில் கடந்த 65 ஆண்டுகளாக வைகை அணை பகுதியில் செயல்பட்டு வரும் மீன்வளத்துறை அலுவலகம் மூலம் அரசு நேரடியாக மீன்பிடி நடத்தி வந்தது. இந்த மீன்வளத்துறை மூலம் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரித்து, மக்களுக்கு மீன் மூலம் கிடைக்கும் புரத சத்தை அதிகரித்து வழங்குவது இந்த துறையின் முக்கிய நோக்கமாக உள்ளது.

வைகை அணை மீன்பிடியை அரசு நடத்தியபோது‌, மீனவர்கள் பங்கு அடிப்படையில் மீன்பிடித்து வந்தனர். அதன்படி மீனவர்கள் தினமும் பிடிக்கும் மீன்களில் 50 சதவீதத்தை மீன்வளத்துறைக்கு அளிக்க வேண்டும். மீனவர்களிடம் பெறும் மீன்களை மீன்வளத்துறை மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மீன்பிடி தொழிலில் சுமார் 140 மீனவர்கள் 70 பரிசல்களில் மீன் பிடித்து வருகின்றனர். இங்கு ஒருநாளைக்கு 500 கிலோ முதல் 1 டன் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இயற்கை முறையில் வளரும் வைகை அணை மீன்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு அதிகளவில் பிடிக்கப்படும் ஜிலேபி ரக மீன்களை பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.

மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன் பண்ணை செயல்பட்டு வருகிறது. மணிமுத்தாறு, பவாணி சாகர் அணை உள்ளிட்ட பகுதிகளில் நுண் மீன்குஞ்சுகள் வாங்கப்பட்டு, அதனை மீன் பண்ணையில் உள்ள தொட்டியில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு கொண்டை, ரோகு, கட்லா, மிருகால் போன்ற மீன் ரகங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. கண்மாய் மற்றும் குளங்களில் மீன் வளர்ப்பவர்களுக்கு நுண் மீன் குஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன் பண்ணையில் உள்ள மீன் தொட்டிகளில் நுண் மீன்குஞ்சுகள் 45 நாட்களுக்கு வளர்க்கப்பட்டு, மீன் குஞ்சுகள் வளர்ச்சியடைந்த பிறகு அணைகளிலும், கண்மாய், குளங்களிலும் வளர்ப்புக்காக வழங்கப்படும்.

வைகை அணையில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மீன்பிடி உரிமை தனியாருக்கு மாற்றினாலும், தற்போது இருக்கும் மீனவர்கள் மட்டுமே பரிசலில் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது‌. 5 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் மீன்பிடி உரிமத்திற்கு அடிப்படை விலையாக ஆண்டுக்கு ரூ.80 லட்சம் அரசு நிர்ணயம் செய்தது.

இந்த நிலையில் வைகை அணை மீன்பிடி உரிமத்தை கைப்பற்ற பலரும் போட்டியிட்டனர். இதில் கோவையை சேர்ந்த ஜஹாங்கீர் என்பவர் 82 லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு மீன்பிடி உரிமையை கைப்பற்றியுள்ளார். தற்போது ஏலம் எடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் மீன்பிடிக்கும் உரிமை வழங்கப்பட உள்ளது. ஏலம் எடுத்த தொகையில் இருந்து 10 சதவீதம் கூடுதலாக ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 13ம் தேதி முதல் வைகை அணையில் மீன்பிடி நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு மீன்பிடி நடைபெற்றதால் 2 டன்னுக்கும் மேல் மீன் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மீன்பிடி உரிமையில் தனியார் நிறுவனம், மீனவர்கள் பிடிக்கும் கட்லா, மிருகால், ரோகு வகை மீன்களுக்கு கிலோவிற்கு ரூ.30ம், ஜிலேபி ரக மீன்களுக்கு ரூ.35ம் கூலியாக நிர்ணயம் செய்ததாக கூறப்படுகிறது.‌ அதன் பின்னர் மீனவர்கள் கூலி பிரச்சனையால் மீன்பிடி நிறுத்தப்பட்டது.

பின்னர் மீன்வர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கட்லா, மிருகால், ரோகு வகை மீன்களுக்கு ரூ.35ம், ஜிலேபி ரக மீன்களுக்கு ரூ.40ம் விலை வழங்கப்பட்டது. மேலும் 10 கிலோவிற்கு‌ ஒரு கிலோ வழங்க வேண்டும் என்று ‌ டெண்டர் எடுத்தவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வைகை அணை மீன்பிடி உரிமம் தனியார் வசம் சென்ற நிலையில், மீன்பிடியில் பழைய முறைப்படி பங்கு அடிப்படையில் நடத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *