மாவட்ட ஆட்சித்தலைவர்வீ.ப.ஜெயசீலன், தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.
——-
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சூலக்கரை கிராமத்தில் இன்று (22.03.2023) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இக்கிராமசபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள், கிராம வளர்ச்சித்திட்டம்(VPDP), தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
பூமியில் வாழும் மனிதர்கள், அனைத்து உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் நாம் குடிக்கக்கூடிய நன்னீரின் அளவு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிக்கனமாக உபயோகிக்க வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் குடிநீரின் முக்கியத்துவம் குறித்து நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள். நாம் ஒவ்வொருவரும் வீடுகளில்; மழை நீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்தி மழைநீர் வீணாகாமல் பூமிக்கு கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
அனைத்து கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் உள்ள குடிநீரை ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அதில் உள்ள அமில காரத்தன்மை அளவு குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விநியோகப்பட்டு வருகிறது.
மேலும் அனைவரும் தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிப்பதன் மூலம் தண்ணீரால் பரவக்கூடிய பல்வேறு நோய்களை தடுக்க முடியும்.
மேலும் 30 வயது கடந்த அனைவரும் தற்போதுள்ள உணவு பழக்க வழக்கத்தால் ஏற்படும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களான நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள நவீன வசதிகளை பயன்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதனை செய்து தங்கள் உடல் நலத்தை பேணி காக்க வேண்டும். சிறு தானிய உணவினை தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சூலக்கரை ஊராட்சிக்கு புதிய வறுகால் அமைத்தல், பைப் லைன் அமைத்தல், புதிய மின் இணைப்பு, தெரு விளக்கு, பேவர் பிளாக் சாலை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ள சுமார் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர் ஆதாரங்களை பெருக்குவதிலும், சிக்கன நடவடிக்கையில் அரசு எடுக்கும் நீர் பாதுகாப்பு சார்ந்த எந்த ஒரு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும், தண்ணீரை மிக சிக்கனமாக செலவழிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, சூலக்கரை ஊராட்சியில் ஊராட்சித்துறை மூலம் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த பொதுமக்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் பொதுமக்கள் சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டு தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியபடி சூலக்கரை ரயில்வே கேட்டில் தொடங்கி சூலக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வரை சென்றடைந்தது.
அதைதொடர்ந்து, சூலக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் மழைநீர் சேகரிப்பு அமைப்பதற்கான பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வரையப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, சிறப்பான ரங்கோலி கோலங்கள் வரைந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.தெய்வேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) திருமதி நாச்சியார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காஜா மைதீன் பந்தே நவாஸ், வட்டாட்சியர் திரு.அறிவழகன் கிராம பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.