மாமல்லபுரத்தில் சர்வதேச அலை சறுக்குப் போட்டி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் .

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு சர்பிங் சங்கம், இந்திய சர்பிங் சம்மேளனம் ஆகியவை இணைந்து இந்தியாவில் முதல் முறைாக சர்வதேச சர்பிங் ஒபன் போட்டி நடத்தப்படுகிறது. சர்வதேச அலை சறுக்குப் போட்டியான இந்தப் போட்டி மாமல்லபுரத்தில் ஆகஸ்டு 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியாவில் விளையாட்டு வளர்ச்சியில் தொடர்ந்து தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. பல துறைகளில் வளமான பாரம்பரியத்தை வளர்த்து வருகிறது. நமது மாநிலம் ஆக்கி, கபடி, கிரிக்கெட், டென்னிஸ், ஸ்குவாஷ், கைப்பந்து, வாள்வீச்சு, சதுரங்கம் போன்றவற்றில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் தனித்துவத்தை உறுதிப்படுத்தி வருகிறது. சமீப காலங்களில், சர்பிங் விளையாட்டு ஊக்கு விப்பை தமிழ்நாடு முன்னின்று நடத்தி வருகிறது.

தலை சிறந்த தேசிய சர்பிங் சம்பியன்கள் மூலம் 2028 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதில் நாடு உறுதியாக உள்ளது. இந்த லட்சிய நோக்கத்தை நனவாக்கும் வகையில் நம் சர்பிங் வீரர்களுக்கு அதி நவீன வசதிகள், உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சிகள் வழங்கவும் சர்வதேச நிபுணர்கள் ஒத்துழைப்புடன் விளையாட்டு வீரர்களின் செயல் திறன் நிலைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் சர்வதேச அளவிலான கபடி, கால்பந்து போட்டிகளை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநில விளையாட்டு சங்கங்களுடன் பேசி வருகிறோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.தமிழ்நாடு சர்பிங் சங்க தலைவர் அருண்வாசு கூறும்போது, பல்வேறு பிரிவுகளில் சர்வதேச சர்பிங் ஒபன் போட்டி நடக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக 10 வைல்டு கார்டு வழங்கப்படுகிறது என்றார். இந்தப் போட்டிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.2 கோடியே 67 லட்சத் துக்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அலை சறுக்கு போட்டி சங்க தலைவர் அருண்வாசுவிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் உறுப்பினர்-செயலர் மேக நாதரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *