கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும்
உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை
நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான பிப்ரவரி 3
அன்று, முதற்கட்டமாக கோவை, மதுரை, சென்னை ஆகிய மூன்று நகரங்களில்
நடத்தப்பட்டன. தமிழ் இணையக் கல்விக்கழகம் உயர்கல்வித் துறையுடன் இணைந்து
இந்நிகழ்ச்சியை நடத்தியது.
நமது தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூகச்
சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம்
தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டு செல்வதற்காக
தமிழ்நாடு அரசு இந்தப் பரப்புரைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்
மரபும்- நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம்,
மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல்
மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முனைவிற்கான வாய்ப்புகள்
மற்றும் முன்னெடுப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளில்
சொற்பொழிவுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கல்லூரிகளில்
‘மாபெரும் தமிழ்க் கனவு பரப்புரைத் திட்டம்’ நிகழ்த்தத் திட்டமிடப்பட்டு, தொடர்ந்து
நடத்தப்பட்டு வருகின்றன. நிகழ்வு நடக்கும் கல்லூரிகளுக்கு அருகிலுள்ள
கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் பங்கு பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் குறைந்தபட்சம் 1 லட்சம் மாணவர்களைச் சென்றடைவதே திட்டத்தின்
இலக்காகும். பல்வேறு தளங்களில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் 50-க்கும் மேற்பட்ட
ஆளுமைகளைக் கொண்டு, 200 சொற்பொழிவுகளை 60 நாட்களில் நடத்திமுடிக்க
செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இரண்டு பேச்சாளர்கள் தமிழ்ப் பெருமைகளைப்
பறைசாற்றும் வகையிலும், அதேநேரம் அவர்கள் புலமை பெற்ற துறை சார்ந்தும் பேருரை
நிகழ்த்துவார்கள். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆளுமைகள் மற்றும் பல்துறை நிபுணர்கள்
ஆகியோரின் ஊக்கமிகு உரை மாணவர்களுக்கு உத்வேகம் அளிப்பதாகவும் அவர்களுக்குத்
தமிழ் மரபின் பெருமிதத்தை உணர்த்துவதாகவும் அமைந்து வருகிறது.
மாணவர்களுக்கு உதவும் வகையில் புத்தகக் காட்சி, நான் முதல்வன், வேலைவாய்ப்பு
மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி ஆலோசனை, சுய
உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் போன்ற அரங்குகள் நிகழ்வு நடைபெறும் கல்லூரிகளில்
அமைக்கப்படுகின்றன.
இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ‘உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
வழிகாட்டி’, ’தமிழ்ப் பெருமிதம்’ ஆகிய இரு கையேடுகள் வழங்கப்படுகின்றன.
‘உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி’, என்னும் கையேடு மாணவர்கள்
கல்லூரிப் படிப்பை முடித்து எந்தத் திசையில் பயணிக்கலாம் என்பதற்கு வழிகாட்டுவதாக
அமையும். உயர் படிப்பிற்கான வாய்ப்புகள், வங்கிக் கடன் உதவி, போட்டித் தேர்வுகளை
அணுகுவது எப்படி போன்ற அனைத்து வினாக்களுக்கும் விடை அளிப்பதாக இந்த வழிகாட்டி
கையேடு அமைகிறது.
தமிழ்ப் பெருமிதங்களைப் பறைசாற்றும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ‘தமிழ்ப்
பெருமிதம்’ என்ற கையேடு உரிய தரவுகள் மற்றும் சான்றுகளுடன் வடிவமைக்கப்பட்டு
மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பழம் பெருமைகளும், கால ஓட்டத்தில் ஏற்பட்ட
மாற்றங்களும் தற்போது தமிழ்ச் சமூகம் பெற்றிருக்கும் ஏற்றங்களும் ரத்தினச் சுருக்கமாக
வண்ணப் படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு நூல்களும் நிச்சயம்
மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தப் பரப்புரையின் தொடர்ச்சியாக சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரிக்
கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் “கல்வி சிறந்த தமிழ்நாடு“
என்னும் பொருண்மையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ்
பொய்யாமொழி அவர்களும், “பகிர்தல் அறம்” என்ற தலைப்பில் திருமிகு. இரா.
பாலகிருஷ்ணன் இ.ஆ.ப (ஓய்வு), தலைமை ஆலோசகர், ஒடிசா மாநில அரசு அவர்களும்
தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர்
சே.ரா.காந்தி, IRPFS அவர்கள் திட்டத்தின் நோக்கத்தை விளக்கினார். எத்திராஜ் கல்லூரியின்
முதல்வர் முனைவர் உஷாராணி அவர்கள் நன்றியுரை வழங்கினார். எத்திராஜ் கல்லூரியின்
தமிழ் துறைத் தலைவர் முனைவர் அரங்க மல்லிகா அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
மேற்கண்ட நிகழ்வில் ஏறத்தாழ 1000 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். நிகழ்வின்
இறுதியில் தமிழ்ப் பெருமிதம் சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம்
அளித்த மாணவர்களைப் பாரட்டிப் பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் எனப் பட்டம்
சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. சொற்பொழிவாளர்களிடம் தரமான
கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன்
எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு அரசால்
நடத்தப்பெறவுள்ளன.