மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை பிகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசினார்

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியை பிகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். புதுடெல்லி, அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. மாநில வாரியாக வெற்றிக்கனி பறிப்பதற்கான உத்திகளை அந்தக் கட்சி தீவிரமாக வகுத்து வருகிறது.இதற்கு மத்தியில், நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒரே அணியாக போட்டியிடச்செய்வதற்கான நடவடிக்கையில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார்.இந்த நிலையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியைத் தொடர்வதற்காக நிதிஷ் குமார் நேற்று டெல்லிக்கு புறப்பட்டுச்சென்றார். அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க திட்டமிட்டிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியுடன், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தியின் தகுதி நீக்கம், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *