மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். புதுடெல்லி, காவிரி டெல்டா பகுதிகளான ஒரத்தநாடு அருகேயுள்ள வடசேரி, அரியலூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு ஆகிய 3 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழக அரசிடம் கேட்காமல் இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டது காவிரி டெல்டா பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகஅரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.இந்த நிலையில் நிலக்கரி எடுக்கும் விவகாரம் தமிழக சட்டசபையிலும் இன்று எதிரொலித்தது. சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், “நிச்சயமாக சொல்கிறேன் முதலமைச்சராக மட்டுமல்ல.. நானும் டெல்டாகாரன். எனவே இதில் உறுதியாக நான் இருப்பேன். நீங்கள் எல்லாம் எப்படி இதில் உறுதியாக இருக்கிறீர்களோ அதைவிட நான் உறுதியாக இருப்பேன். எந்த காரணத்தை கொண்டும் நிச்சயமாக நமது தமிழ்நாடு அரசு இதற்கு அனுமதி அளிக்காது” என்றார்.இந்த நிலையில், மத்திய நிலக்கரி துறை மந்திரி பிரகலாத் ஜோஷியை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்க வேண்டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு, மத்திய நிலக்கரி துறை மந்திரி பிரகலாத் ஜோஷியை சந்தித்து மனு அளித்துள்ளோம் என்றும் கோரிக்கை மனு குறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி அளித்துள்ளார்; பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்றென்றும் துணை நிற்கும் என அண்ணாமலை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *