மதுரையில் தமிழ்நாட்டின் மிக நீண்ட பறக்கும் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.மதுரை முதல் நத்தம் வரை மொத்தம் 44.3 கி.மீ தூரத்திற்கு தற்போது புறவழி பறக்கும் சாலை மத்திய அரசு மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த பணிகள் நடந்து வருகின்றன.இந்த திட்டத்திற்கு இடையே மதுரை- நத்தம் ரோட்டில் 4 வழிச்சாலையாக பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த 44 கிமீ தேசிய நெடுஞ்சாலையில் மொத்தம் 7.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.சென்னை, திருச்சி செல்லும் போக்குவரத்து நேரத்தை குறைக்க, மக்கள் எளிதாக பயணம் செய்ய வசதியாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 612 கோடி ரூபாயில் இந்த பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. 2021ல் முடிய வேண்டிய இந்த பணி 2018ல் தொடங்கியும் கூட 2 வருடம் தாமதமாக முடிந்து உள்ளது. கொரோனா காரணமாக இடையில் இதன் பணிகள் தடை பட்டன. இந்த சாலை பகுதி மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதி ஆகும். அதோடு சென்னையை இணைப்பதால் இங்கே அதிக அளவில் போக்குவரத்து தினமும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சாலை நெரிசலாக காணப்பட்டு வந்தது. இப்படிப்பட்ட நிலையிலதான் அங்கு தற்போது மிகப்பெரிய அளவில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் ஒவ்வொரு 150 அடிக்கும் ராட்சச தூண்களை வைத்து இந்த பிரம்மாண்ட பாலத்தை கட்டி உள்ளனர்.காங்கிரீட் கர்டர் மூலம் இந்த தூண்கள் இணைக்கப்பட்டு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. 220 தூண்கள் இந்த பாலத்திற்காக அமைக்கப்பட்டு உள்ளன. பாலத்திற்கு மேலேயும், கீழேயும் நவீன எல்டிடி விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஊமச்சிகுளம் அருகே மாரணி பகுதி வரை இந்த பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் இடையில் இடையே இணைப்பு பாலங்கள் நான்கு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. நத்தம் சாலையில் உள்ள நாராயணபுரம், திருப்பாலை, அய்யர் பங்களா ஆகிய பகுதிகளிலும் மற்றும் விசால்டி மஹால் , ஊமச்சிகுளம் ஆகிய பகுதிகளிலும் ஏறி இறங்க வசதியாக துணை பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் உள்ளூர் உள்ளே செல்ல வேண்டியவர்களுக்கு எளிதாக செல்ல முடியும். இதனால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து குறையும். அதோடு மதுரை – திருச்சி பயண தூரம் 23 கிமீ வரை குறையும்.இதனால் மக்கள் மிக எளிதாக இந்த பாலத்தில் பயணம் செய்ய முடியும். இந்த பாலத்தில் நேற்று முதல் நாளில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அதாவது மக்கள் வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் இதையடுத்து பாலத்தில் நேற்று வேகமாக பயணம் செய்தனர்.மக்கள் மிகவும் வேகமாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு இதன் மூலம் சென்றடைந்தனர் என்று கூறப்படுகிறது. நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இந்த பாலத்தை திறந்து வைக்க இருக்கிறார்.
மதுரையில் மிக நீண்ட பறக்கும் பாலத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார்.
