பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் பயிற்சி
முகாம், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும்
சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தொடங்கி
வைத்தார்கள்.
மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் அடையாறு கிரவுன் பிளாசாவில் இன்று (17.3.2023)
பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் பயிற்சி முகாமை துவக்கி
வைத்து உரையாற்றுகையில்,
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, பலநவீன
தொழில்நுட்பங்களைக் கொண்டு, இன்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக பல
கட்டடங்களை உருவாக்கி தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில்
பொதுப்பணித்துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
பொதுப்பணித்துறை மூலம் கட்டப்படும் கட்டடங்கள் அனைத்தும் இயற்கை
சீற்றங்களான பூகம்பம், புயல் மற்றும் சுனாமி போன்றவற்றை எதிர்கொள்ளும் விதத்தில்
தரம் மற்றும் உறுதித்தன்மையுடன் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டுமானம் AEC என்னும்
மூன்று அங்கங்களைக் கொண்டது. அதாவது A-ஆர்க்கிடெக்ட்ஸ், E-இன்ஜினியர்ஸ், C-
கான்ட்ராக்டர்ஸ். இந்த மூன்று அங்கங்களும், ஒன்றுடன் ஒன்று இணைந்து பணிபுரிந்தால்,
கட்டுமானங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக்
கொண்டுவர முடியும்.
அக்கட்டடங்களை உருவாக்கும் பணியில், நமது பொறியாளர்கள், கட்டட கலைஞர்கள்
மட்டுமல்லாமல், நம் துறை சார்ந்த அனைத்துப் பணியாளர்களின் பங்களிப்பும்
இன்றியமையாதது. வீடு, நிர்வாக அலுவலகம், தொழிற்சாலை போன்ற எந்த வகைக்
கட்டடங்களாக இருந்தாலும், அவை பொது மக்களின் நீண்ட நாள் பயன்பாட்டிற்கு
நிலைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஒரு கட்டுமானத்தின் வெற்றி என்பது, அக்கட்டுமானம் எந்த நோக்கத்திற்காக
உருவாக்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தினை நிறைவேற்றுவதாக அமைவதைப்
பொறுத்ததாகும். உதாரணமாக, மருத்துவத்துறையின் பயன்பாட்டிற்கான கட்டடம் எனில்,
அது தொடர்பான அடிப்படை அறிவினைக் கட்டுமானத் துறையின் மூன்று அங்கங்களும்
தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
அதற்காக அத்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடி, தேவைகளை அறிந்து,
அவற்றைத் தற்கால தொழில் நுட்பங்களுடன் இணைத்து, கட்டுமானங்களை நாம்
மேற்கொள்ள வேண்டும்.
கட்டுமானப் பொறியியல் வல்லுநர்கள் உலகளவில் சந்தையில் கிடைக்கும் நவீன
கட்டுமானப் பொருள்களின் வருகை, அவற்றின் தன்மை, பயன்பாடு, விலை ஆகியவற்றை
அவ்வப்போது அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய நவீன தொழில்நுட்ப
நடைமுறைகளைப் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள்
அறிந்து, அவற்றை இத்துறை உருவாக்கிடும் கட்டங்களில் பயன்படுத்தினால், தரம் மற்றும்
உறுதித்தன்மையோடு கட்டடங்கள் உருவாகும். கட்டடங்களுக்கான செலவினங்களும்
குறையும். அதுமட்டுமல்லாமல் கட்டடப் பராமரிப்புச் செலவினங்களும் வெகுவாகக்
குறையும்.
எனவே, பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள் கட்டுமானங்களில்
அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களைத் தெரிந்து கொண்டு
அவற்றை நடைமுறைப் படுத்துவதில், ஆர்வமுடன் செயல்பட்டாக வேண்டும். உங்கள்
ஒவ்வொருக்கும் இத்தகைய ஆர்வம் மிகவும் அவசியம்.
கட்டடங்களை உருவாக்கும்போது, பொறியாளர்கள் மற்றும் கட்டட கலைஞர்கள்
பின்வரும் நடைமுறைகளை அவசியம் பின்பற்ற வேண்டும். மண் பரிசோதனை,
கட்டடத்திற்கு தேவையான உறுதித் தன்மையுடன் இருக்கிறதா என்பதை முதலில் ஆராய
வேண்டும். கட்டட கலைஞர்கள்,
கட்டட வரைபடங்கள் தயாரிக்கும் போது, கட்டடங்களில் அமைக்கப்படும் கழிவுநீர்க்
குழாய்கள் வெளியேறும் பகுதியில் கான்கீரிட் போன்ற அமைப்புகள் குறுக்கிடாமல்
வடிவமைத்திட வேண்டும்.
அதேபோல், மின் அமைப்புகளும் கான்கீரிட் போன்ற அமைப்புகள் குறுக்கீடு இல்லாமல்
வடிவமைக்கப்பட வேண்டும். கட்டடங்களில் நீர்க்கசிவு ஏற்படாத வண்ணம் தேவையான
வாட்டர் ப்ரூப் நடைமுறைகளை அவசியம் பயன்படுத்திட வேண்டும். எம்-சாண்ட் சுவர்
பூச்சுப் பயன்பாட்டிற்குத் தேவையான கெமிக்கல் கலவை பயன்படுத்தப்பட வேண்டும். மின்
பொறியாளர்கள் அவ்வப்போது மின் அமைப்புகளை ஆய்வு செய்து மின் கசிவு ஏதும்
ஏற்படா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.
தற்போது பொதுப்பணித்துறையில் மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள், பீம் (Beam),
சிலாப் (Slab), காலம் (Column) என்ற முறையில் பணித்தளத்திலேயே அதாவது ONSITE-ல்
மேற்கொள்ளப்படுகிறது.
ஊட்டி போன்ற மலைப்பகுதிகளிலும் தற்போது இதே நடைமுறை
பின்பற்றப்படுகிறது. மலைப் பகுதிகளில் தரைதளம் + முதல்தளம் என்ற அளவிலேயே
கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது.
இதுபோன்ற இடங்களில், கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல மிகுந்த நேரம்
தேவைப்படுகிறது. அதனால் இவ்விடங்களில் பிரீபேவ் டெக்னாலஜி (PREFAB
Technology) மூலம் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இப்பணிகளின் தொழில்நுட்ப விவரங்களை திட்டம் மற்றும் வடிவமைப்பு வட்டம்
தயாரித்து அளிக்க வேண்டும்