பேட்ஸ்மேன்களுக்கே கூடுதல் சாதகம் ஒருநாள் போட்டியில் ஒருதலைபட்சம்…சச்சின் ஆதங்கம்

புதுடெல்லி: ஒருநாள் போட்டிகளுக்கான விதிமுறைகள் ரன்குவிப்புக்கே அதிக சாதகமாக உள்ளதாகவும், பேட்ஸ்மேன் – பவுலர் இடையேயான சவாலில் ஒரு சமநிலை வேண்டும் எனவும் சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். இது குறித்து சச்சின் நேற்ரு கூறியதாவது: தற்போது டி20 போட்டிகள் அசுர வளர்ச்சி பெற்றுள்ளன. ஒரு சில பந்துகளில் ஆட்டத்தின் முடிவே அடியோடு மாறிவிடுகிறது. டி20யின் இந்த விறுவிறுப்பு காரணமாக, ஒருநாள் போட்டிகள் மீதான ரசிகர்கள் ஆர்வம் வெகுவாகக் குறையத் தொடங்கியுள்ளது. டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுமே தனித்துவமானவை என்றாலும், ஒருநாள் போட்டிகளுக்கான எதிர்காலம் சற்று கவலை தருவதாகவே உள்ளது.

கிரிக்கெட் நிர்வாகம் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என நினைக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் மட்டைக்கும் பந்துக்கும் இடையேயான பலப்பரீட்சையில் ஒரு சமநிலை இல்லை. தற்போதைய விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கே அதிக சாதகமாக உள்ளன. ஒரே இன்னிங்சில் 2 வெள்ளை பந்துகள் உபயோகிக்கப்படுவது மற்றும் ஃபீல்டிங் கட்டுப்பாடுகளால் பந்துவீச்சாளர்களின் நிலை பரிதாபமாகிவிட்டது. பந்து வண்ணம் இழப்பது, ரிவர்ஸ் ஸ்விங் போன்ற பவுலர்களுக்கு சாதகமான அம்சங்கள் காணாமல் போய்விட்டன. இதனால் பேட்ஸ்மேன்கள் எந்த கவலையும் இல்லாமல் விளாசித் தள்ளும் வாய்ப்பு உருவாகி உள்ளது.இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இரு தரப்புக்கும் சம வாய்ப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே போல, காலநிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து டாஸ் வெல்லும் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு என்ற நிலையையும் மாற்ற வேண்டும். இதற்கு, ஒருநாள் போட்டிகளை தலா 25 ஓவர்கள் கொண்ட 4 இன்னிங்சாக விளையாடுவது குறித்து ஐசிசி தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய தருணம் இது என கருதுகிறேன். வெறும் டாஸ் முடிவை வைத்தே வெற்றி யாருக்கு என்பது தீர்மானமாகிவிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதே நோக்கம். இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *