ஸ்ரீநகர் : புல்வாமா தாக்குதல் விவகாரத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கை ரூ.300 கோடி லஞ்சம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் 2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஆளுநராக சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது கிரு நீர்மின் திட்டம் தொடர்பான ரூ.2,200 கோடி மதிப்புடைய திட்டம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டங்களை குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ஒதுக்க ரூ.300 கோடி லஞ்சம் தர சில நிறுவனங்கள் முன் வந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இதைத் தொடர்ந்து அவரிடம் சிபிஐ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணை நடத்தியது. இந்த நிலையில், இந்த வழக்கில் வருகிற 28ம் தேதி ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக பேசிய சத்யபால் மாலிக், இந்த வழக்கு தொடர்பான சில விஷயங்களை தெளிவுபடுத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி சிபிஐ கேட்டு கொண்டுள்ளதாகவும் தான் ராஜஸ்தான் செல்ல இருப்பதால் ஏப்ரல் 27 அல்லது 28ம் தேதிகளில் ஆஜராக உள்ளதாக சிபிஐ-யிடம் கூறியதாகவும் தெரிவித்தார். முன்னதாக அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற பாஜக தலைவர் ராம் மாதவ் தனக்கு பணம் கொடுத்ததாக சத்யபால் மாலிக் குற்றம் சாட்டி இருந்தார்.