பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள்மீதான தண்டனையை விரைவில் உறுதிப்படுத்துக என்று கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை

திருவான்மியூர் கலாஷேத்ரா பள்ளியில் பாலியல் வன்கொடுமை!
குற்றவாளிகள்மீதான தண்டனையை
விரைவில் உறுதிப்படுத்துக திருவான்மியூர் கலாஷேத்ரா பள்ளியில் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள்மீதான தண்டனையை விரைவில் உறுதிப்படுத்துக என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர்கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
1962 இல் அடையாறிலிருந்து திருவான்மியூருக்கு மாற்றப்பட்டது கலாஷேத்ரா நிறுவனம். இது ஒரு ஒன்றிய அரசு நிறுவனமாகும்.
இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்துக்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் உண்டு.
முழுக்க முழுக்க ஓர் அக்ரகார நிறுவனமாகவே நடப்பிலும், செயல்பாட்டிலும் காணப்படக்கூடிய நிறுவனம் இது. ஒன்றிய அரசின் கலாச்சார ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தில் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் பெரும்பாலும் அக்ரகாரமாகவே காட்சி அளிக்கும்.
இந்த நிறுவனத்தில் பயிலும் மாணவிகள் பாலியல் துன்பத்திற்கு ஆளாக்கப்படுவதாக பல கட்டங்களிலும் புகார்கள் வந்ததுண்டு. ஆனால், யார்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை.
இப்பொழுது பாலியல் துன்புறுத்தல் பெரும் அளவில் நடந்த காரணத்தால், பிரச்சினை முற்றி, வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
மாணவிகள் நிறுவனத்தை எதிர்த்து இரவு பகலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தும் அளவுக்கு உச்சத்தை அடைந்துவிட்டது. விடுதி இழுத்து மூடப்பட்டது.
மகளிர் தேசிய ஆணையத்திடம் மாணவிகள் எழுத்துப்பூர்வமாகப் புகார்கள் கொடுத்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இதுகுறித்து முதலமைச்சர் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் அனுப்பப்பட்டு உரிய விசாரணை நடத்திட ஆணையிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள்மீது உரிய சட்ட ரீதியான நடவடிக்கை கட்டாயம் எடுக்கப்படும் என்று  முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பேராசிரியர் ஹரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், சிறீநாத்மீது மாணவிகள் புகார் கொடுத்திருந்தும், ஒரு பேராசிரியர்மீது 3 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  சென்னையில் பதுங்கியிருந்த ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த கலாஷேத்ராவின் மேனாள் மாணவி, பேராசிரியர் ஹரி பத்மன் மீது எழுத்துப்பூர்வமாக அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு மகளிர் காவலர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் ‘‘விஸ்வரூபம்‘’ எடுத்திருக்கும் நிலையில் வழக்கு விசாரணைக்குத் தேவையான சான்றுகளைத் திரட்டும் பணியில் மாநில காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
மாணவி அளித்திருக்கும் புகாரின் பேரில் 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  இதுதொடர்பாக பேசிய காவல்துறை அதிகாரிகள் ‘பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேவையான சான்றுகளைத் திரட்டி வருகிறோம். அதன்பின்னரே கலாஷேத்ரா பாலியல் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும்‘ என்று தெரிவித்தனர். கேரள மாணவி அளித்த புகாரில் தன்னுடன் படித்த 5 மாணவிகள் பற்றியும், அவர்களிடம் விசாரித்தால் பேராசிரியர் பற்றி பல்வேறு தகவல்கள் மேலும் தெரியவரும் என்றும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே  மகளிர் ஆணையம், கலாஷேத்ரா இயக்குநர் ரேவதியிடம் விசாரணை நடத்தியது. விசாரணை வெறும் மேலோட்டமாகவே இருக்கிறது.
இதில் தாமதத்திற்கு இடமின்றி சட்டம் தன் கடமையைச் செய்யவேண்டும்!
சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி, கோவை சின்மயா போன்ற பள்ளிகளிலும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
நடவடிக்கை எந்த அளவில் எடுக்கப்பட்டது என்பது யாருக்கோ வெளிச்சம்!
குற்றச்செயல்களில் கூட வர்ணாசிரமக் கண்ணோட்டம் கூடாது.
மாணவிகள் அச்சமின்றிக் கல்விக் கூடங்களுக்கு வரும் நிலை உறுதி செய்யப்படவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *