டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பது தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியதற்கு முதலமைச்சருக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் வகையிலும், இனி மாநில அரசின் ஒத்திசைவு இன்றி தன்னிச்சையாக ஒன்றிய அரசு செயல்படக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் திட்டமிட்டபடி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் நடவடிக்கையை அடுத்து, திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை தஞ்சாவூரில் எமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு அறிக்கையைக் கடந்த 5 ஆம் தேதியன்று வெளியிட்டு இருந்தோம்.
அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறப்போராட்டத்தில் பங்கு ஏற்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, வேண்டுகோள் கடிதமும் அனுப்பி, தொலைப்பேசி வழியாகவும் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதற்கு இசைவு தந்திருந்தனர்.
தமிழ்நாட்டின் எதிர்ப்புக் காரணமாக
திட்டத்தைக் கைவிட்ட ஒன்றிய அரசு!
இந்த நிலையில், நிலக்கரி சுரங்கத்தைத் தமிழ்நாட்டில் அமைக்க மேற்கொண்டிருந்த திட்டம் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் எதிர்ப்புக் காரணமாக கைவிட்டதாக அறிவித்துள்ளது.
போராட்டம் நடக்கவிருந்த சில மணிநேரங்களுக்கு முன் இந்தச் செய்தி கிடைத்துள்ளது. ஒன்றிய அரசுக்கு நன்றி!.
அதேநேரத்தில், திட்டமிட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் மாலை நடைபெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எந்தத் திட்டமாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஒத்திசைவு இல்லாமல் ‘தானடித்த மூப்பாக’ ஒன்றிய அரசு செயல்படுவது ஜனநாயக முறைக்கு ஒவ்வாத, மாநில அரசுகளை மதிக்காத தான்தோன்றித்தனமாகும்.
எதிர்ப்பு வலுத்தவுடன் பின் வாங்குவது என்பதெல்லாம் ஏற்புடையதல்ல!
ஒன்றை தன் விருப்பத்துக்கு ஏற்ப அறிவிப்பது, எதிர்ப்பு வலுத்தவுடன் பின் வாங்குவது என்பதெல்லாம் ஏற்புடையதல்ல.
நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பிரச்சினையில் நிலம் வழங்கியோருக்கு ஒன்றிய அரசு கொடுத்த உத்தரவாதங்கள் வெறும் வார்த்தைகளாகவே இருந்து வருகின்றன.
இன்று (8.4.2023) நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தப் பிரச்சினையும் முக்கிய அம்சமாக இருந்தது என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டு காட்டவேண்டிய கடமையும் முக்கியமாக இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க முனைப்புக் காட்டிய ஒன்றிய அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், தமிழ்நாடு அரசு இதனை ஏற்காது என்றும் உடனடியாக சட்டப்பேரவையில் அறிவித்ததோடு, ஒன்றிய அரசோடு தொடர்பு கொண்டு தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை அழுத்தமாகத் தெரிவித்து வெற்றி பெற்ற நமது மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நேரத்தில் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
திட்டமிட்டபடி அறவழி ஆர்ப்பாட்டம்
இன்று நடைபெறும்!
தமிழ்நாட்டு மக்களின் மாநில உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும், விரைந்து செயலாற்றி வெற்றியைத் தேடித்தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையிலும் இன்றுமாலை 4 மணிக்குத் தஞ்சாவூர் தலைமைத் தபால் நிலையம் அருகில் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கவேண்டுமாயும் கேட்டுக் கொள்கிறோம்!