சமீபத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு தொடர் வண்டி
முன்பாக எனது தலைமையில் நடைபெற்ற மறியல் ஆர்ப்பாட்டம் குறித்து பா.ஜ.க.
தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். கடந்த
மார்ச் 23 ஆம் தேதி காலையில் அரியலூர் மாவட்டம், டி.பழுரில் நடைபெற்ற
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு
காலை 11 மணியளவில் காங்கிரஸ் நண்பர்களோடு வந்து சேர்ந்தேன். அப்போது
அங்கிருந்த ஓய்வு அறையில் பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு
ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய செய்தியை அறிய நேரிட்டது.
உடனடியாக பத்திரிகையாளர்களிடம் கடுமையான விமர்சனத்தை
வெளிப்படுத்தினேன்.
தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கைது செய்யப்பட்ட செய்தியை கேட்டவுடனே
கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டேன். அந்த நேரத்தில் எனக்குள்ளே
உருவான மன எழுச்சியின் அடிப்படையில் உடனடியாக முதல் எதிர்ப்பை
வெளிப்படுத்த வேண்டுமென்று நினைத்த போது அங்கே வர இருக்கிற ரயில் முன்
மறியல் செய்ய வேண்டுமென்று முடிவெடுத்தேன். அப்போது என்னுடன் இருந்த
தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. ஜி. ராஜேந்திரன், தஞ்சை வடக்கு
மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. டி.ஆர். லோகநாதன், குடந்தை நகர தலைவர்
திரு. மிர்சாவூதீன் ஆகியோருடன் சேர்ந்து அப்போது அங்கு வந்த சோழன் விரைவு
தொடர் வண்டி முன்பு பா.ஜ.க.வுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி
மறியல் போராட்டத்தை நடத்தினேன்.
தலைவர் ராகுல்காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக
எதிர்வினையாக்குவது தான் எனது நோக்கமாக இருந்ததால் என்னோடு நான்கு
பேர் இருக்கிறார்களா, நானூறு பேர் இருக்கிறார்களா என்பதைப் பற்றி நான்
கவலைப்படவில்லை. எனது முதல் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று
விரும்பினேன். அதன்படி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டம்
தொலைக்காட்சிகளில் வெளியாகி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர்
நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. இதை விமர்சிப்பதற்கு
பா.ஜ.க.வினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது.
விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியடிகள் 1940 ஆம் ஆண்டில் அறிவித்த
போராட்டத்திற்கு பெயர் தனிநபர் சத்தியாகிரகம். ஒரு தனிநபர் சத்தியாகிரகம்
செய்து பிரிட்டீஷ் ஆட்சியை அகற்றிவிட முடியுமா என்று எவரும்
காந்தியடிகளை விமர்சித்ததில்லை. அதைப்போல, தலைவர் ராகுல்காந்தி
அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட உடனே என்னுள் பெருக்கெடுத்த
உணர்ச்சியின் அடிப்படையில் தான் மறியல் போராட்டத்தை நடத்த
முன்வந்தேன்.
என் இளமைப் பருவம் முதல் அநீதிக்கு எதிராக போராடுகிற ஒரு போராளியாகத்
தான் எனது அரசியல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த
அடிப்படையில் தான் எனது ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இத்தகைய
அரசியல் பின்னணி இல்லாத திடீர் அரசியல்வாதி அண்ணாமலை போன்ற
அரைவேக்காடுகளுக்கு, என்னைப் போல உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கான
வாய்ப்பு இல்லை. ஆகஸ்ட் 2020 இல் பா.ஜ.க.வில் சேருகிறார். 2021 சட்டமன்றத்
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைகிறார். உடனே, தோல்விக்கு பரிசாக
மாநில பா.ஜ.க. தலைவராகிறார். இவை அனைத்தும் ஓராண்டிற்குள்ளாக பெறுகிற
வாய்ப்பு கிடைத்ததால் நாள்தோறும் மலிவான அரசியலை நடத்திக்
கொண்டிருக்கிறார்.
ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சித் தலைவராக, ஊராட்சி ஒன்றிய
பெருந்தலைவராக, இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக, ஒருமுறை
மக்களவை உறுப்பினராக மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து
காங்கிரஸ் கட்சியில் ஊறித் திளைத்த பிறகு தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்
பதவியை நான் பெற்று செயல்பட்டு வருகிறேன். இத்தகைய அரசியல் பின்னணி
இல்லாத அண்ணாமலை போன்ற அனாமதேயப் பேர்வழிகளுக்கு எனக்குள்ளே
எழுந்த உணர்ச்சியை புரிந்து கொள்ள முடியாது.