துரை வைகோ அவர்கள் ஆற்றிய உரை

கடலூரில் 31.3.2023  நடைபெற்ற ஆசிரியர் வீரமணி அவர்களின் சமூக நீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்கப் பயண நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் ஆற்றிய உரை:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அண்ணன் கே.எஸ்.அழகிரி அவர்களே! சிறுத்தைகளின் சிங்கமனையத் தலைவன் வாழும் அம்பேத்கர், நான் பெரிதும் மதிக்கும் தலைவர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களே! திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுச் செயலாளர் அண்ணன் இளபுகழேந்தி அவர்களே! கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் அவர்களே !

தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களே! சமூக நீதி பாதுகாப்பு – திராவிட மாடல் விளக்கப் பயண நிறைவு நாள் நிகழ்வில் சிறப்புரை ஆற்ற இருக்கிற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களே!
பத்திரிகையாளர்களே! அனைவருக்கும் என் மாலை வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிஞர் அண்ணா அவர்கள் நினைவு நாளான பிப்ரவரி 3 ஆம் தேதி, தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாநகரில் தொடங்கிய இந்த சமூகநீதிப் பயணம் இன்று ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள் பிறந்த கடலூர் மாநகரில் நிறைவு பெற இருக்கிறது.

இன்றல்ல, நேற்றல்ல, கிட்டத்தட்ட 75 ஆண்டுகளாக தமிழகத்திற்கு வீரமணி அய்யா அவர்களின் பங்களிப்பை யாராலும் மறக்கவோ, மறைக்கவோ இயலாது.

தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் ஊட்டி வளர்த்த சமூக நீதியும் சுயமரியாதையும் தமிழ்நாட்டில் நீர்த்துப் போகாமல் தன் வாழ்நாள் முழுவதும் போராடி  வரும் அய்யா வீரமணி அவர்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், மாமனிதர் வைகோ அவர்கள் சார்பிலும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் நீங்களும் சுயமரியாதையுடன் வாழ  கிட்டதட்ட 75 ஆண்டுகளாக குரல் கொடுக்கும் ஆசிரியர் வீரமணி அவர்களை பெற்றெடுத்த அய்யா கிருஷ்ணசாமி-மீனாட்சி அம்மையார்,
திராவிடர் கழகத்தில் அவரை வார்ப்பித்த ஆசிரியர் திராவிட மணி,
அவரை பொதுவாழ்வில் சிறப்பிக்க வைத்த மூத்த சகோதரர் அய்யா கோவிந்தராஜன்,

அவர்களது பொது வாழ்விற்கு அவருக்கு துணை நிற்கும் ஆசிரியரின் துணைவியார் மோகனா அம்மையார்,

ஆசிரியருடன் பயணித்துவரும் திராவிடர் கழகத் தோழர்கள் ஆகிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களை பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே கடலூர் மாநகரில் பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியார் அவர்கள் பேசும் போது அவர் மீது கற்கள் வீசப்பட்டன. அழுகிய முட்டைகள் வீசப்பட்டன. மனித மலம் வீசப்பட்டது. செருப்பு வீசப்பட்டது.

‘செருப்பு வீசப்பட்ட போது இன்னொரு செருப்பும்  வரட்டும்’ என்று காத்திருந்து அதனையும் பெற்றுக் கொண்டு, எதிர்ப்புக்கு அஞ்சாமல் போராடியவர் தந்தை பெரியார்.

‘செருப்பு ஒன்று போட்டால் சிலை ஒன்று முளைக்கும்’ என்று அந்த சம்பவம் இடத்திலேயே சிலை எழுப்பி அந்த நிகழ்வை குறிப்பிடும் வகையில் கல்வெட்டையும் வைத்துள்ளார்கள் இந்த கடலூரில்.

அய்யா வீரமணி அவர்களை 10 வயதில் மேடை ஏற்றி பேச வைத்த ஊர்  இந்த கடலூர்.

இதே கடலூரில்தான் அய்யா வீரமணி அவர்கள் சிறுவனாக இருந்த போது  ‘திராவிடர்  கழகத்தின் திருஞானசம்பந்தர்’ என்று அறிஞர் அண்ணா பாராட்டினார்கள்.

இத்தகைய பெருமைமிக்க கடலூரில், ஆசிரியர் வீரமணி பிறந்த ஊரில், ஆசிரியர் வீரமணி கல்வி கற்ற ஊரில், ஆசிரியர் பொதுவாழ்வில் தடம் பதித்த ஊரில் ஆசிரியர் வீரமணி அவர்களை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

அய்யா வீரமணி அவர்கள் 12 வயதில் காரைக்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் உரையாற்றியவர்.

23 வயதில் முதுகலை பயின்று தங்கப்பதக்கமும் பெற்று தேர்ச்சி பெற்றவர்.

27 வயதில் சட்டக்கல்வியை முடித்தார். அதே ஆண்டில் தந்தை பெரியார் நடத்திய தமிழ்நாடு நீங்கலான தேசப்படத்தை எரித்து தந்தை பெரியாருடன் சிறை சென்றவர்.

29 வயதில் தந்தை பெரியாரின் அழைப்பினை ஏற்று ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

43 வயதில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 358 நாள்கள் சிறைக் கொட்டடியில் இருந்தவர்தான் நம் அய்யா அவர்கள்.

அப்படி அவர் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது இன்றைய  முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் சிறைக் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தி, அந்த அடிகளை தான் தாங்கிக் கொண்டு  இன்றைய முதலமைச்சரைக் காப்பாற்றிய பெருமைக்குரியவர் அய்யா வீரமணி அவர்கள்.

திராவிட இயக்கக் கொள்கைகளில் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாத இயக்கம் திராவிடர் கழகம்.

இன்று அதன் தலைவராக இருக்கிற அய்யா வீரமணி அவர்களும் கொள்கைகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளாத தமிழகத்தின் இன்றைய மூத்த தலைவர்.

திராவிடர் கழகம் நாத்திகர்களுக்கு மட்டுமல்லாது, என்னை போன்ற இறை நம்பிக்கை உடையவர்களுக்கும் போராடிய இயக்கம்.  இறைநம்பிக்கை உடையவர்களுக்கு வழிபாட்டு உரிமையைப் பெற்று தந்த இயக்கம் திராவிடர் கழகம்.

தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் கோயிலுக்குள் செல்ல  Gate Pass பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார் அவர்கள்.

எனவே தான் நான் அரசியலில் அடி எடுத்து வைத்த போது பெரியாரும் வேண்டும் பெருமாளும் வேண்டும் என்று உரக்கச் சொன்னேன்.

இன்றைய நிகழ்வை என்னிடம் சொல்லும் போது அய்யா வீரமணி அவர்களின் சமூக நீதிப் பயணம் நிறைவு நாள் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.  அதிலிருந்து நான் வேறுபடுகிறேன்.

ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற மதவாத சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கின்ற வேளையில் அதற்கு நாம் வழிவிடக் கூடாது.  தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஊட்டி வளர்த்த சமூக நீதிப் பயணம் தொடர்ந்து நடைபெற வேண்டும்.  சமூக நீதி பயணம் என்பது தொடர் ஓட்டம் போன்றது. அந்தப் பணியை  அய்யா வீரமணி அவர்கள் 100 வயதுக்கும் மேலும் தொடர்ந்து செய்வார்.

இந்த பணியை தொடர்ந்து செய்யும் பொறுப்பு எனக்கும் உண்டு. அண்ணன் திருமா அவர்களுக்கும் உண்டு. அண்ணன் கே.எஸ். அழகிரிக்கும் உண்டு. இந்த மேடையில் வீற்றிருக்கிற ஒவ்வொரு தலைவர்களுக்கும் உண்டு. மேடை முன்னால் அமர்ந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் உண்டு இந்த பொறுப்பு.
சமூக நீதியைப் பற்றி பேசும் போது நாம் நம்முடைய ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்., ஆர். என். ரவி அவர்கள் பற்றியும்  பேசியாக வேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒரு ஆளுநருக்கு உரிய அதிகாரங்கள், கடமைகள் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமலும் தன் கடமைகளை நிறைவேற்றாமலும் வரம்புமீறி சனாதனக் கருத்துகளை பேசி வருகிறார்.

இதன் அடிப்படையில் நான் இந்தப் பொதுக் கூட்டத்தில்  ஓர் அதிர்ச்சிச் செய்தியை  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது 20-21, 21-22  இரண்டு கல்வி ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த  இலட்சக்கணக்கான தமிழக கல்லூரி மாணவர்களுக்கு பட்டப்படிப்பு தகுதிச் சான்றிதழ்களை பல்கலைக் கழகங்கள் கொடுக்காததால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. ‘Provisional Certificate’ தற்காலிக பட்டச் சான்றிதழ் மூலம் பெற்ற வேலையும் பறி போய் இருக்கிறது .

தஞ்சையை சேர்ந்த ஜே. ஹபிபுல்லா என்ற மாணவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு தற்காலிக பட்டப்படிப்பு தகுதிச் சான்று மூலம் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார். அதன் மூலம் அவருக்கு வேலை கிடைத்தது. ஆனால் அந்த  பட்டப்படிப்புச் தகுதிச் சான்றிதழ் கிடைக்காததால் வேலை பறி போய் இருக்கிறது. இதற்கு காரணம் யார்? நமது ஆளுநர் ரவி அவர்கள்.

அதேபோல் நமது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மட்டும் 2.2 லட்சம் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. எவ்வளவு துயரப்பட்டிருப்பார்கள் அந்த மாணவர்கள்.

இது போன்ற தவறுகள் நடக்கக் கூடாது என்று மாணவர்கள் நலனை பாதுகாக்க, 2016 ஆம் ஆண்டு பல்கலைக் கழக மானியக் குழு செயலாளர் (UGC Secretary) ஜஸ்பால் எஸ். சாந்து, அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ‘ஒரு படிப்பில் மாணவர் தேர்ச்சி பெற்ற தேதியில் இருந்து 180 நாட்களுக்குள் அவருக்கு பட்டப்படிப்பு தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் UGC Act இன் படி பல்கலைக்கழகத்துக்கு எதிராக பல்கலைக் கழக மானியக்குழு (குறை தீர்வு)  நெறிமுறைகள் 2012 இல் உள்ள விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள் இருந்த போதும் நம்முடைய மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு காரணம் யார்? நம்முடைய ஆளுநர் ரவி அவர்கள்தான்.

அவருடைய அலுவலக அதிகாரிகள், ‘ஆளுநரின் அதிக வேலைப் பளு காரணமாக இந்த தாமதம்  ஆகிவிடுகிறது’ என்று கூறுகிறார்கள். இதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது.

ஏனென்றால் திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்த போது ஆன்மீகக் கருத்துகளை நீக்கிவிட்டார் என்று திருக்குறளை மொழி பெயர்த்து உலகிற்கு அறிமுகம் செய்த ஜி.யு. போப் மீது குற்றம்சாட்டியவர்தான் ஆளுநர் என். ரவி.

தமிழ்நாடு அல்ல, தமிழகம் தான் பொருத்தமான பெயர் என்று விவாதம் செய்தார் இந்த ஆளுநர் அவர்கள்.

காரல் மார்க்ஸ் சிந்தனை இந்தியாவை சிதைக்கிறது என்று மார்க்ஸ் தத்துவத்தை குறை சொன்னவர் இந்த ஆளுநர் அவர்கள்.

இத்தகைய சனாதனக் கருத்துக்களைப் பரப்புவதில் அதிக அக்கறை காட்டுகிறார். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கு பெறுகிறார்.

ஆனால் கல்லூரி மாணவர்களுக்கு பட்டப்படிப்பு தகுதிச் சான்றிதழ் வழங்குவதில்  ஒரு அலட்சியப் போக்கை கையாளுகிறார்.

இதே போல் இவருடைய அலட்சியப் போக்கால் தமிழ் நாடு அரசு கொண்டுவந்த ஆன் லைன் தடைச்சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு  இன்றைக்கு பல தமிழர்கள் தற்கொலைக்கு ஒரு மறைமுக காரணமாக விளங்குகிறார்.

இது போன்று தெலுங்கான மாநில ஆளுநர், மாநில அரசு இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது குறித்து உச்சநீதிமன்றத்திற்கு  தெலுங்கானா மாநில அரசு எடுத்துச் சென்றுள்ளது. உச்சநீதி மன்றமும் ஆளுநரின் போக்கு குறித்து ஒன்றிய அரசுக்கு விளக்கம் கேட்பதாக கூறியுள்ளது.

அதே போல் தமிழ்நாடு அரசும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று, தமிழ்நாடு ஆளுநரின் தமிழ்நாட்டு மக்கள் விரோத போக்கிற்கும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் நடவடிக்கைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இந்த மேடையில் நாட்டின் ஜனநாயகத்தை குழித்தோண்டி புதைக்கும் ஒரு சமீபத்திய நிகழ்வை நினைவுகூர  விரும்புகிறேன்.  அது அனைவருக்கும் தெரியும். சட்டத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டு, பல்வேறு பொருளாதார குளறுபடிகளைச் செய்துவிட்டு, வங்கிகளில் நிதி மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடி,  இன்டர் போல் என்று அழைக்கப்படும் சர்வதேச காவல் துறையால் தேடப்படும் நீரவ் மோடி, லலித் மோடி போன்றவர்களைப் பற்றி  2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் காங்கிரசு கட்சியின் இளந் தலைவர் ராகுல் காந்தி  பேசினார்.  அவர் சொல்லும் போது நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று மூவருக்கும் ஒரே குடும்பப் பெயர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை வைத்துக் கொண்டு வட இந்தியாவில் வாழும் மோடி சமுகத்தினரை இழிவுபடுத்திவிட்டார்  ராகுல் காந்தி என்று ஜோடித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில்  வழக்கைத் தொடர்ந்தார் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் பூர்னேஷ் மோடி .

அந்த வழக்கு சர்சையான முறையில்  நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்டு இன்று ராகுல்காந்தி அவர்கள் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என்று கூறிவிட்டது நீதிமன்றம். இது ஜனநாயகப் படுகொலை என்று சொல்ல வேண்டும். அந்த தீர்ப்பின் அடிப்படையில் ‘‘Representation of People Act’ மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி ராகுல் காந்தி அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதைதான் ராகுல் காந்தி அவர்கள் இங்கிலாந்து நாட்டில் பேசினார். ஒரு ஜனநாயக நாட்டில் பாராளுமன்றம், நீதிமன்றம், காவல்துறை, பத்திரிகைத் துறை, மத்திய புலனாய்வுத் துறை இது போன்ற அமைப்புகள் சுயேச்சையாக, சுதந்திரமாக அதிகார வர்க்கத்தின் எந்த தலையீடும் இல்லாமல் செயல்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை நம் நாட்டில். அதன் விளைவாகத்தான் இந்த பதவி பறிப்பு நடைபெற்றுள்ளது.

இதைதான் ராகுல்காந்தி அவர்கள் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் ‘Indian democracy is under attack இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். அவர் தாக்கியது பா.ஜ.க. மதவாத அரசை.  இந்திய நாட்டை அல்ல. இந்திய நாடாளுமன்றத்தை அல்ல.

இதை தான் எங்கள் தலைவர் வைகோ அவர்கள் சொன்னார்கள், ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிச ஆட்சியைப் போல, இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சியைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சி போல இந்தியாவில் பா.ஜ.க. அரசு ஆட்சி செய்கிறது.
ஆனால் வரலாற்று பக்கங்களைத் திருப்பிப்பார்த்தால் நாசிசத்தை, பாசிசத்தை, கொடுங்கோல் ஆட்சியினை மக்கள் சக்தி தூக்கி எறிந்திருக்கிறது  என்பதை நாம் காணலாம்.   அதே போல் இங்கு பா.ஜ.க. அரசு வீழ்வது உறுதி. வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் 2024 இல் பா.ஜ.க. அரசு வீழ்வது உறுதி.

இந்த யுத்தம் ராகுல் காந்திக்கும் நரேந்திர மோடிக்கும் நடக்கின்ற யுத்தம் மட்டுமல்ல.

காங்கிரஸ் இயக்கத்திற்கும் பா.ஜ.க.வுக்கு மட்டும் நடக்கிற யுத்தம் மட்டுமல்ல.

ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் நடக்கும் யுத்தம்.

ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையிலான யுத்தம்.

சமூக நீதிக்கும் சனாதனத்துக்கும்  இடையிலான யுத்தம்.

மதவாதிகளுக்குப் புரிகின்ற வகையில் சொல்வதென்றால்,
பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம்.

தருமருக்கும் துரியோதனனுக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது.

இறுதியில், ஜனநாயகமே வெல்லும், சமூக நீதியே வெல்லும், வாய்மையே வெல்லும், அறமே வெல்லும் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *