துபாய் தீ விபத்தில் 2 தமிழர்கள் பலி முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு

சென்னை: துபாய் தீவிபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் காதர் மகன் இமாம் காசீம் (43) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த சலியா குண்டு மகன் குடு (எ) முகமது ரபிக்(49) ஆகிய இருவரும் கடந்த 15ம்தேதி அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை துரித நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

பாமக தலைவர் அன்புமணி: துபாய் அடுக்குமாடி வளாகத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இரு தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த இமாம் காசீம், குடு என்கிற முகமது ரபிக் ஆகிய இரு தமிழர்களின் உடல்களை உடனடியாக சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *