உச்சநீதிமன்றத்தில் தமக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் கிடப்பில் வைத்திருந்த சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்களுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திடீரென ஒப்புதல் வழங்கினார் தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநில அரசுக்கும் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.தெலுங்கானா மாநில சட்டசபையில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கிடப்பில் போட்டுவிடுகிறார் என்பது ஆளும் பி.ஆர்.எஸ்.கட்சியின் குற்றச்சாட்டு. இதற்கு பதிலடியாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரை இல்லாமலேயே சட்டசபையை கூட்டியது பி.ஆர்.எஸ். அரசு.இந்நிலையில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா மாநில அரசு ஒரு வழக்கு தொடர்ந்தது. தெலுங்கானா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஆளுநர் தமிழிசையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 2022-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி முதல் இம்மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். ஆளுநர் தமது கடமையை செய்யவில்லை. அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளுக்கு எதிரானது இது. ஆகையால் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும் என்பது தெலுங்கானா மாநில அரசின் வழக்கு. ஏற்கனவே பஞ்சாப் மாநில சட்டசபையை கூட்டுவதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் என உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதனைத் தொடர்ந்து தெலுங்கானா மாநில அரசும் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் அதனை நியாயப்படுத்தி வந்தார். இதனால பஞ்சாப், தெலுங்கானா அரசுகள் பாணியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளைக் கண்டித்து நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 4 மாதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக 2-வது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் 3 நாட்களுக்கு முன்னரே இம்மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தார் எனவும் கூறப்பட்டது. இப்பின்னணியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிரான தெலுங்கானா மாநில அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்கு வரும் முன்பாக திடீரென நிலுவையில் இருந்த 3 மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் ஹரீஷ் ராவ் கூறினார். மேலும் 10க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில் 3 மசோதாக்களுக்கு மட்டுமே ஆளுநர் தமிழிசை சவுந்த்ரராஜன் ஒப்புதல் தந்திருப்பது துரதிருஷ்டவசமானது எனவும் சாடியுள்ளார்.
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/telangana-governor-dr-tamilisai-soundararajan-consents-3-pending-bills-506778.html
Read more at: https://tamil.oneindia.com/news/delhi/telangana-governor-dr-tamilisai-soundararajan-consents-3-pending-bills-506778.html