தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது 50 இடங்களில் ஒரே நாளில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தத .தமிழ்நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களால் பல இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது.அதன்படி தமிழகம் முழுவதும் 24 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தும், 23 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள அனுமதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இதனை ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. அதாவது சுற்றுச்சுவருக்குள் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம் அல்லது உள் அரங்குகளிலும் அணிவகுப்பை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் தொடரப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், அணிவகுப்புக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர். மேலும் பல்வேறு அமைப்புகளுக்கு போராட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு மட்டும் அனுமதி வழங்கவில்லை என வாதிட்டனர்.இதையடுத்து தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மேலும் ஊர்வலத்துக்கு பிப்ரவரி 12, 19, மார்ச் 5 தேதிகளை பரிந்துரை செய்யப்பட்டது. பிப்ரவரி 11ம் தேதி தமிழக டிஜிபி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விண்ணப்பித்தனர். மார்ச் 5ம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கிடையே ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கான நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதிக்கான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. தமிழ்நாடு அரசு தமது வாதத்தை விரிவான அறிக்கையை தாக்கல் செய்யலாம் என உத்தரவிடப்பட்டது. மேலும் மார்ச் 27 ல் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின்போது தமிழ்நாட்டில் 50 இடங்களில் உடனே ஆர்எஸ்எஸ். அணிவகுப்புக்கு அனுமதி தர முடியாது. முதல் கட்டமாக 5 இடங்களில்தான் அனுமதி தர முடியும். உளவுத்துறை தாக்கல் செய்த அறிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல் ஆர்எஸ்எஸ்.பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துவிட்டது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதாவது ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சுப்ரீம்கோர்ட் உறுதி செய்தது. மேலும் ஆர்எஸ்எஸ் பேரணி வழக்கில் தமிழக அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.