மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் 2ம் பாகம், வரும் 28ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வரும் விக்ரமுக்கு இது 61வது படமாகும். கோலார் பகுதியிலுள்ள தங்கச் சுரங்கத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை கே.ஈ.ஞானவேல் ராஜா, பா.ரஞ்சித் இணைந்து தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.
தங்கலான் என்றால், ஊர்க்காவல் என்று அர்த்தம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி இப்படம் உணர்ச்சிகரமாகப் பேச இருக்கிறது. இதில் இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன், மாளவிகா மோகனன் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், வரும் 17ம் தேதி விக்ரம் பிறந்தநாளில், ‘தங்கலான்’ படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.