ஜி.ஜி.சிவா வெளியிட்டுள்ள அறிக்கை

நாடு முழுவதும் இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து விட வேண்டுமென துடித்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசு, அதனை தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என இந்தியில் குறிப்பிட வேண்டுமென அறிவுறுத்தியிருப்பதை தேசிய முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான ‘தஹி’ என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் ‘தயிர்’ கன்னடத்தில் ‘மோசரு’ போன்ற வார்த்தைகளை அடைப்பு குறிக்குள் பயன்படுத்தலாம் என ஒன்றிய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

ஒன்றிய அரசின் இந்த அறிவுறுத்தல் தென்மாநிலங்களில் கடும் அதிருப்தியையும், பெரும் அதிர்ச்சியை பொதுமக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு  செய்து வருகின்றனர். ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என குறிப்பிடவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதை தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வரவேற்கிறோம்.

இதை தொடர்ந்து ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் தஹி என இந்தியில் அச்சிடப்படாது. மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்பதால் நடைமுறைப்படுத்த முடியாது’ என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளதற்கு தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற சிறுபிள்ளைதனமான செயல்களில் ஈடுபட்டு மாநில மொழிகளை அழித்துவிடலாம் என நினைத்து கொண்டிருக்கும் மதவாத பாஜக ஒன்றிய அரசு இந்த அறிவுறுத்தலை திரும்ப பெற வேண்டுமெனவும் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வலியுறுத்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *